நடிகை ரகுல் ப்ரீத் சிங் – ஜாக்கி பாக்னானி திருமணம் வரும் பிப்ரவரி 21-ந் தேதி கோவாவில் நடைபெற உள்ள நிலையில், திருமணத்திற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழில் வெளியான 7ஜி ரெய்ன்போ காலணி படத்தின் ரீமேக்காக கன்னடத்தில் வெளியான கில்லி என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். அதனைத் தொடர்ந்து, யுவன் என்ற டப்பிங் படத்தின் மூலம் தமிழுக்கு வந்த அவர், அடுத்து அருண் விஜய் நடிப்பில் வெளியான தடையற தாக்க என்ற படத்தில் நடித்தார். இந்த படம் வெற்றிப்படமாக அமைந்தது.
அடுத்து புத்தகம், என்னமோ ஏதோ, ஆகிய படங்களில் நடித்த அவருக்கு வெற்றி கிடைக்காத நிலையில், தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தினார். சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான ஸ்பைடர் படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்த ரகுல், எச்.வினோத் இயக்கத்தில் வெளியான கார்த்தியின் தீரன் படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
இந்த இரு படங்களுமே அவருக்கு வெற்றியை கொடுத்தது. அடுத்து கார்த்தியுடன் தேவ், சூர்யாவுடன் என்.ஜி.கே, பூ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த இவர், தற்போது, கமலுடன் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே கடந்த 2021-ம் ஆண்டு முதல், நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பாக்னானியுடன் டேட்டிங்கில் இருக்கும் ரகுல் தற்போது அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
இவர்களின் திருமணம் வரும் பிப்ரவரி 21-ந் தேதி கோவாவில் நடைபெற உள்ளது. இந்த திருமணத்திற்கு பங்கேற்கும் அனைவருக்கும் சர்க்கரை இல்லாத மற்றும் பசையம் இல்லாத உணவுகள் பரிமாறப்பட உள்ளது. அதே போல் சமீபத்தில் மும்பையில் திருமணத்திற்கு முந்தைய விழா தொடங்கியது. இதில் ரகுல் ப்ரீத் சிங் – ஜாக்கி பாக்னானி அங்குள்ள சித்தி விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து ஆசீர்வாதம் பெற்றனர்.
இருவரும் ஒன்றாக கோவிலுக்கு பூஜைக்கு தேவையான பொருட்களுடன் வந்தனர். இவர்கள் இருவரின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏற்றபடி திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ள ரகுல் ப்ரீத் சிங், தங்கள் திருமணத்தை முன்னிட்டு பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளனர். கார்பன் தடயத்தை அதிகரிக்கும் வகையில் தங்கள் திருமண நாளில் மரம் நட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரகுல் ப்ரீத் சிங் – ஜாக்கி பாக்னானி திருமண கொண்டாட்டங்கள், இன்று (பிப்ரவரி 19) தொடங்கி வரும் 21-ந் தேதி 3 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் அதனை கண்காணிக்க, கார்பன் தடம் நிபுணர்களை நியமித்துள்ளனர். இந்த நிபுணர்கள் கார்பன் தடயத்தை ஆய்வு செய்து, ரகுல் ப்ரீத் சிங் – ஜாக்கி பாக்னானி தம்பதிக்கு கூறியவுடன், அதற்கு ஏற்றபடி அவர்கள் மரம் நடுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“