நடிகை த்ரிஷா குறித்து அவதூராக பேசிய நடிகர் மன்சூர் அலி கான் பகிரங்க மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து அவருக்கு கமல்ஹாசன் ஸ்டைலில் நடிகை த்ரிஷா பதில் கொடுத்துள்ளார்.
சமீபத்தில் வெளியான விஜயின் லியோ படத்தில் அவரது நண்பராக நடித்திருந்த நடிகர் மன்சூர் அலிகான், படத்தில் த்ரிஷா நடிக்கிறார் என்று சொன்னவுடன், அவருடன் பெட்ரூம் சீன் இருக்கும் ரோஜா மற்றும் குஷ்புவை தூக்கி பெட்டில் போட்ட அவரையும் போடலாமா என்று நினைத்தேன். இப்போதெல்லாம் பலாத்கார காட்சியே படங்களில் வைக்கப்படுவதில்லை. 150 படங்களில் நான் பார்க்காத ரேப்பா என்று கூறியிருந்தார்.
மன்சூர் அலிகானின் இந்த பேச்சு சமூகவலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் அவருக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டிருந்தனர். இதனிடையே நடிகை த்ரிஷா வெளியிட்டிருந்த பதிவில், மன்சூர் அலிகானுடன் இதுவரை நடிக்காததை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். இனிமேலும் அவருடன் நடிக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.
இதற்கு விளக்கம் அளித்து மன்சூர் அலிகான் வெளியிட்ட பதிவில் அவர் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்று கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிகர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் என பலரும் மன்சூர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிக்கை விட்டிருந்தனர். மேலும் மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்த நிலையில், மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டு அவரை காவல்துறையினர் விசாரணைக்காக சம்மன் அனுப்பியிருந்தனர்.
மேலும் தனக்கு முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடிய மன்சூர் அலிகான், இன்று த்ரிஷா குறித்து தான் பேசிய கருத்துக்களை மன்னிப்பு கேட்டிருந்தார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆம் அடக்க நினைத்தால் அடங்க மறு இப்ப சொல்கிறேன் என்னை மன்னித்துவிடு. "ஒரு வாரமாக நடந்த கத்தியின்றி ரத்தமின்றி போரில் நான் வெற்றி? பெற்றுவிட்டேன்!
எனக்காக வாதிட்ட தலைவர்கள், நடிகர்கள், ஊடகவியலாளர்கள் யாவோர்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். எதிர்த்து என்னை கண்டித்த மானுடர்களுக்கும் பணிவான வணக்கங்கள். கலிங்கத்துப் போர் முடிந்தது. லட்சக்கணக்காணோர் மாண்டு கிடக்க, சாம்ராட் அசோகனின் இதயத்தில் ரத்தம் வடிந்து, அஹிம்சையை தழுவினான். ஆம். மனசாட்சியே இறைவன்.
காவல் அதிகாரி அம்மையார் திரிஷாவின் மனது வருத்தப்பட்டிருக்கிறது எனச் சொல்ல, 'ஐயஹோ எனக்கும் வருத்தம் தான்' என வந்துவிட்டேன். யதார்த்த நிலை! இறையச்சமே நம் குழந்தைகளின் நல்வாழ்க்கையை அருளும்! எனது சக திரைநாயகி திரிஷாவே, என்னை மன்னித்துவிடு! இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக!! ஆமீன் என கூறியிருந்தார்.
மன்சூர் அலிகானின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அவரது பதிவுக்கு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த சர்ச்சைக்கு தொடர்புடையவரான நடிகை த்ரிஷா, கமல்ஹாசன் பாணியில், "தவறு செய்வது மனிதம், மன்னிப்பது தெய்வீகம்" என நச் பதிலளித்துள்ளார். த்ரிஷாவின் இந்த பதில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“