க்ளாசிக் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த சரோஜா தேவி, எம்.ஜி.ஆருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நிலையில், படப்பிடிப்பில், நாகேஷை ஓங்கி அறைந்துள்ளார்.
Advertisment
கர்நாடகாவில் பிறந்த சரோஜா தேவி, 1955-ம் ஆண்டு வெளியான மகாகவி காளிதாஸ் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். நடிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லை என்றாலும் தனது அம்மாவுக்காக ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்ட சரோஜா தேவி, மகாகவி காளிதாஸ் படத்தில் நடித்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்ததால், அடுத்து ஒரு படத்தில் மட்டும் நடித்துவிடு என்று அவரது அம்மா கூறியுள்ளார்.
இந்த படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அடுத்தடுத்து சரோஜா தேவிக்கு பட வாய்ப்பும் குவிய தொடங்கியது. அதன்பிறகு தான், தமிழில் திருமணம் படத்தின் மூலம் அறிமுகமான இவர், அடுத்து சிவாஜியின் தங்கமலை ரசகியம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான செங்கோட்டை சிங்கம் படம் தான் சரோஜா தேவி நாயகியாக நடித்த முதல் படம்.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீதர் இயக்கிய கல்யாணப்பரிசு படத்தில் நடித்த சரோஜா தேவி, 1961-ம் ஆண்டு வெளியான எம்.ஜி.ஆரின் திருடாதே படத்தில் இவருடன் ஜோடியாக நடித்திருந்தார்.அதன்பிறகு எம்.ஜி.ஆருடன் நாடோடி மன்னன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்த, சரோஜா தேவி, 1965-ம் ஆண்டு வெளியான கலங்கரை விளக்கம் படத்தில் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்திருந்தார். கே.சங்கர் இயக்கிய இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இந்த படத்திற்கு அனைத்து 3 பாடல்களை கவிஞர் வாலி எழுதியிருந்தார். அதேபோல் பாரதிதாசன் எழுதிய சங்கே முழங்கு என்ற பாடல் இந்த படத்தில் இடம்பெற்றிருந்தது. மகாபலிபுரம் பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோது இந்த பாடல் காட்சிக்கு முன்னதாக வரலாற்றில் பைத்தியமாக இருக்கும் சரோஜா தேவி, எங்கே என் மன்னன் என்று கேட்க, பின்னால் இருந்து அவர் செத்து ரொம்ப நாள் ஆச்சு என்று நாகேஷ் சொல்வார். இதை கேட்ட சரோஜா தேவி அவரை ஓங்கி கன்னத்தில் அறைந்துவிடுவார்.
அறை வாங்கிய நாகேஷ் சுற்றிக்கொண்டே எம்.ஜி.ஆர் காலில் விழுந்துவிடுவார். நாம் அடி வாங்கியதை யாரும் பார்க்கவில்லை என்று நாகேஷ் நினைத்துக்கொண்டிருக்க, இங்கு என்ன ஒரு சத்தம் கேட்டது என்று எம்.ஜி.ஆர் கேட்பார். இந்த காட்சியில் நாகேஷ் மிக சிறப்பாக நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் என்று நடிகை சரோஜா தேவி கூறியுள்ளார். தனிப்பட்ட முறையில் நாகேஷ் சரோஜா தேவி இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்ற நிலையில், ஒருமுறை நாகேஷ் நிகழ்ச்சிக்காக சரோஜா தேவி வெளிநாட்டு பயணத்தையே தள்ளி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“