தமிழ் சினிமாவில் பலருக்கும் உதவி செய்த நடிகர் நடிகைகள், பலர் இருக்கிறார்கள். இதில் ஒரு சிலர் மட்டுமே நமக்கு தெரிந்தவர்களாக இருக்கும் நிலையில், உதவிகள் செய்து தெரியாதவர்கள் பட்டியலில் முன்னணியில் இருப்பவர் தான் நடிகை சாவித்ரி.
1934-ம் ஆண்டு ஆந்திராவில் பிறந்த சாவித்ரி, 1951-ம் ஆண்டு வெளியான பாதாள பைரவி என்ற படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஒரே நேரத்தில் அறிமுகமானார். தொடர்ந்து 1952-ல் வெளியான கல்யாணம் பண்ணிப்பார் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சாவித்ரி, பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சிவாஜியுடன் இவர் நடித்த பாசமலர், மற்றும் பாவ மன்னிப்பு உள்ளிட்ட பல திரைப்படங்கள் சாவித்ரிக்கு வெற்றிப்படங்களாக அமைந்தது.
1953-ம் ஆண்டு வெளியான மனம்போல் மாங்கல்யம் என்ற படம் தான் ஜெமினி கணேசன் சாவித்ரி இணைந்து நடித்த முதல் திரைப்படம். பி.புள்ளையாக இயக்கிய இந்த படம் வெற்றி பெற்றது. இந்த முதல் படத்திலேயே ஜெமினி கணேசன் – சாவித்ரி இடையே காதல் மலர்ந்துள்ளது. அதன்பிறகு தனது குடும்பத்தின் எதிர்ப்பை மீறி ஜெமினி கணேசனை திருமணம் செய்துகொண்ட சாவித்ரி, படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல், பட தயாரிப்பிலும் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் இவர் தயாரித்த படங்கள் தோல்வியை சந்தித்ததால், பெரும பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்ட சாவித்ரி, தனது மகளின் திருமணத்திற்கு பணம் இல்லாமல் தவித்து வந்தார். அந்த நேரத்தில் சாவித்ரியின் உதவியாளராகன மவுண்பேட்டன் மணி என்பவர், சாவித்ரியிடம் வந்து உதவி கேட்டுள்ளார். அப்போது என்ன சொல்வது என்று தெரியாமல் இருந்த சாவித்ரி, என் மகள் திருமணத்திற்கே பணம் இல்லாமல் தவிக்கிறேன். இப்போது உனக்கு எப்படி பணம் தர முடியும் என்று கேட்டுள்ளார்.
அடுத்து 2 நாட்கள் கழித்து ஒரு தயாரிப்பாளர், ஒரு புதிய படத்திற்காக சாவித்ரியை அனுகி பெரிய தொகையை முன்பணமாக கொடுத்துள்ளார். இந்த பணத்தை வாங்கிக்கொண்ட சாவித்ரி உடனடியாக மவுண்பேட்டன் மணியை அழைத்து அந்த பணத்தை அவரிடம் கொடுத்துள்ளார். இதை எதிர்பார்க்காத மணி, உங்கள் மகள் திருமணத்திற்கு பணம் இல்லையே என்று சொல்ல, இந்த பணத்தை நான் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு போனால், என் மகள் திருமணத்திற்கு இந்த பணத்தை பயன்படுத்தும் எண்ணம் எனக்கு வந்துவிடும். அதனால் தான் இங்கேயே கொடுக்கிறேன். என் மகள் திருமணத்தை கடவுள் பார்த்துக்கொள்வார் என்று கூறியுள்ளார்,
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக திகழ்ந்த சாவித்ரி, வெளியில் தெரியாமல் பலருக்கும் தன்னால் முடிந்த வரையில் உதவி செய்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“