இப்போது நாங்கள் பிரிந்து இருந்தாலும் அவரை இப்போவும் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று நடிகை நளினி தனது முன்னாள் கணவர் ராமராஜன் குறித்து பேசியுள்ளார்.
1981-ம் ஆண்டு ரஜினிகாந்த் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான ராணுவ வீரன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நளினி. தொடர்ந்து உயிருள்ளவரை உஷா, மனைவி சொல்லே மந்திரம், தங்கைக்கோர் கீதம், நூறாவது நாள், நன்றி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் விஜயகாந்த், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள நளினி, முன்னணி நடிகையாக உச்சத்தில் இருந்தபோது கடந்த 1987-ம் ஆண்டு நடிகர் ராமராஜனை காதலித்து வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அருணா அருண் என்ற இரு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 2000-ம் ஆண்டு இருவரும் திருமண வாழக்கையை முறித்துக்கொண்டனர்.
அதன்பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நளினி தற்போது காமெடி மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடித்து வருகிறார். அதேபோல், கடந்த 2012-ம் ஆண்டு மேதை என்ற படத்தில் நடித்திருந்த ராமராஜன் 11 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தற்போது சாமானியன் என்ற படத்தில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோருடன் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை நளினி, நாங்கள் பிரிந்திருந்தாலும் இப்போதும் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று தனது கணவர் ராமராஜன் குறித்து பேசியுள்ளார். மனைவி சொல்லே மந்திரம் என்ற படத்தில் அவர் உதவி இயக்குனராக இருந்தார். அந்த படத்தரில் நடித்தபோது அவர் என்னை ஒருதலையாக காதலித்தார். எனது உதவியாளர் மூலமாக எனக்கு பல கடிதங்களை கொடுத்துள்ளார்.
ஒரு கட்டத்தில் அவர் நாயகனாக நடிக்க தொடங்கினார். முதல் படம் ஷூட்டிங் செல்வதற்கு முன்பு என்னை சந்தித்து உதவி இயக்குனராக இருந்தால் தான் பொண்ணு தரமாட்டாங்க இப்போ நான் நாயகனா நடிக்க போகிறேன். என்று சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த என் வீட்டார் அவரை அடித்துவிட்டனர். அப்போது அவர் மேல் எனக்கு காதல் ஏற்பட்டது. ஆனாலும் அடுத்து என்னை மலையாள சினிமாவில் நடிக்க அழைத்து சென்றுவிட்டார்கள் மீண்டும் சென்னைக்கு வரவே இல்லை. ஒரு வருடம் கழித்து சென்னை வந்தபோது அவரை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது புதுமுக நடிகராக வந்த பாண்டியன் உதவியுடன் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்.
எங்களுக்கு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் வரவேற்பு வைத்தார். ஆனால் நாங்கள் பிரிந்துவிடுவோம் என்பது எங்களுக்கு அப்போதே தெரியும். குழந்தை பிறந்தவுடன் ஒரு ஆண் ஒரு பெண் என்றவுடன் கண்டிப்பாக பிரிந்துவிடுவோம் என்று சொன்னார்கள். சண்டை போட்டு என் பிரிய வேண்டும் என்பதால் அப்படியே பிரிந்துவிட்டோம். கல்யாணத்திற்கு பின்புதான் எனக்கு அவர் மீது காதல். அவர் வெகுளி. நல்ல மனிதன் அதனால் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/