தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து தற்போது முக்கிய கேரக்டர்களில் நடித்து வரும் நடிகை சீதா, சமீபத்தில் தனது அம்மாவின் மரணம் குறித்து வெளியிட்டுள்ள ஒரு பதிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் 1980-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சீதா. பாண்டியராஜன் இயக்கி நடித்த ஆண்பாவம் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான நடிகை சீதா பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமா முன்னணி நடிகையாக இருந்தார். பார்த்திபன் முதல் முறையாக இயக்கி நடித்த புதிய பாதை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த பின்னாளில் அவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
1989-ம் ஆண்டு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும்போது பார்த்திபனை திருமணம் செய்துகொண்ட சீதா, திருமணத்திற்கு பிறகு 10 ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். சீதா - பார்த்திபன் தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒரு மகனையும் தத்தெடுத்து வளர்த்து வந்தனர். இதனிடையே கடந்த 2001-ம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். விவாகரத்துக்கு பிறகு, மீண்டும் நடிக்கத் தொடங்கிய சீதா சீரியல்களில் கவனம் செலுத்தினார்.
தொடர்ந்து சீரியல் நடிகர் சதீஷ் என்பரை 2-வது திருமணம் செய்துகொண்ட சீதா, ஒரு கட்டத்தில் அவரிடம் இருந்து பிரிந்த நிலையில், தனது அம்மாவுடன் வசித்து வந்தார். இதனிடையே சமீபத்தில், வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சீதாவின் அம்மா மரணமடைந்தார். அம்மாவின் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாத நடிகை சீதா, இது குறித்து வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு தற்போது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தனது வீட்டில் மாடித்தோட்டம், கிராமத்தில் தனது பண்னை வீடு, உள்ளிட்ட பல வீடியோக்களை வெளியிட்டு, இணையத்தில் ஆக்டீவாக இருக்கும் நடிகை சீதா, அவ்வப்போது இயற்கை விவசாயம் தொடர்பான பதிவுகளையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், புத்தாண்டு தினத்தில் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்ட நடிகை சீதா, கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது தாய் சந்திராமோகன் மரணமடைந்துவிட்டதாக பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவியதை தொடர்ந்து, பலரும் அவருக்கு ஆறுதல் கூறிய நிலையில், இரங்கல்களையும் தெரிவித்து வந்தனர். இதனிடையே தற்போது, அம்மாவின் கையை பிடித்துக்கொண்டு இருப்பது போல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள நடிகை சீதா, எனது அம்மா இல்லாதது நான் அனாதை போன்ற ஒரு உணர்வை கொடுக்கிறது என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த பதிவை பார்த்த பலரும் சீதா இந்த துயரத்தில் இருந்து மீண்டு வர வேண்டும் என்று ஆறுதல் கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“