மறைந்த 30 வருடங்கள் கடந்திருந்தாலும், இன்றும் பல சினிமா பிரபலங்களின் பேச்சுக்கள் மூலம் வாழ்ந்துகொண்டிருக்கும் நடிகை சில்க் ஸ்மிதா தமிழ் சினிமாவில் அறிமுகமானது வண்டிச்சக்கரம் என்ற படத்தில் தான் என்றாலும் கூட, அதற்கு முன்பே அவர் பாரதிராஜா இயக்கத்தில் நடிக்க வேண்டியவர் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
இந்திய சினிமாவில், தனது நடிப்பு, நடனம் உள்ளிட்ட பல திறமைகளை வைத்து இன்றும் நிலைத்திருப்பவர் சில்ஸ் ஸ்மிதா. நடிகை சொர்னம் என்பவரிடம் டச்அப் கேர்ளாக இருந்த விஜயலட்சுமி என்ற பெண், ஒரு சில மலையாள படங்களில் நடித்திருந்த நிலையில், 1980-ம் ஆண்டு வினு சக்ரவர்த்தி தயாரித்த வண்டிச்சக்கரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் தான் அவருக்கு சில்க் ஸ்மிதா என்ற பெயரை பெற்று கொடுத்தது.
முதல் படத்தில் கவர்ச்சி நடிகையாக இருந்தாலும், 2-வது படமாக வெளியான அலைகள் ஓய்வதில்லை படத்தில், நடிகர் தியாகராஜனின் மனைவி என்ற கேரக்டரில் நடிப்பில் அசத்தியிருப்பார் சில்க் ஸ்மிதா. அதன்பிறகு ஒரு சில படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இவர், பல படங்களில் கவர்ச்சி கேரக்டரிலும், ஒரு பாடலுக்கு நடனமாடும் டான்சராகவும் நடித்திருந்தார். முன்னணி இயக்குனர்கள் தங்களது படங்களில் சில்க் ஸ்மிதா இருக்க வேண்டும் என்று நினைத்துள்ளனர்.
தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, உள்ளிட்ட இந்திய மொழிகளில் பல படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றியை கொடுத்துள்ள சில்க் ஸ்மிதா, முதலில் பாரதிராஜா படத்தில் தான் அறிமுகமாக இருந்தார். 1979-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஒட்டபெட்டவர் என்ற படம் தான் சில்க் ஸ்மிதா சினிமாவில் அறிமுகமான முதல் படம். இந்த படம் வெளியான அதே ஆண்டு தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் புதிய வார்ப்புகள் படம் வெளியானது.
பாக்யராஜ் நாயகனாக அறிமுகமான இந்த படத்தில், ஒரு பூ விற்கும் பெண் கேரக்டரில் நடிக்க முதலில் சில்க் ஸ்மிதாவை தான் தேர்வு செய்துள்ளார் பாரதிராஜா. அவரை ஆபீஸ்க்கு அழைத்து வந்து போட்டோஷூட் எல்லாம் எடுத்துள்ளனர். அதன்பிறகு இவர் ரொம்ப சின்ன பொண்ணாக இருக்கிறார். இந்த கேரக்டருக்கு சரியாக இருக்கமாட்டார் என்று கூறி, அவரை வேண்டாம் என்று கூறியுள்ளார். ஆனாலும் வேறு படத்தில் பயன்படுத்திக்கொள்வோம். இவர் கண்கள் அவ்வளவு அழகாக இருக்கிறது, கண்ணில் ஒரு காந்தம் இருக்கு என்று பாரதிராஜா கூறியுள்ளார்.
அதன்பிறகு 1980-ம் ஆண்டு வண்டிச்சக்கரம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சில்க் ஸ்மிதா, 1981-ம் ஆண்டு வெளியான அலைகள் ஓய்வதில்லை படத்திற்காக தியாகரானின் மனைவியாக நடிக்க இவர் தான் வேண்டும் என்று கூறி பாரதிராஜா அவரை அழைத்து வருமாறு மனோபாலா மற்றும் மணிவண்ணன் ஆகியோரிடம் கூறியுள்ளார். அதன்பிறகு இருவரும் சில்க் ஸ்மிதா வீட்டை கண்டுபிடித்து அவர அழைத்து வந்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.