தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து தற்போது முக்கிய கேரக்டர்களில் நடித்து வரும் நடிகை சினேகா சென்னை டி.நகரில் புதிய தொழில் ஒன்றை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2000-ம் ஆண்டு வெளியாக என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சினேகா. அதனைத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்த இவர், விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ், கமல் என முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். குறிப்பாக தனுஷூடன் இவர் நடித்த புதுப்பேட்டை, ஸ்ரீகாந்துடன் நடித்த ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட படங்கள் சினோகவுக்கு பாராட்டுக்களை தந்தது.
2012-ம் ஆண்டு நடிகர் பிரச்சன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சினேகாவுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக தனுஷின் பட்டாஸ் படத்தில் நடித்திருந்த இவர், தற்போது விஜயின் கோட் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். தமிழ் மடடுமல்லாமல், தெலுங்கு மலையாளம் இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வரும் சினேகா, கே.ஆர்.விஜயாவுக்கு பிறகு புன்னகை அரசி என்ற பட்டத்துடன் வலம் வருகிறார்.
தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வரும் சினேகா, சென்னை தி நகரில், சினேகாலயா சில்க்ஸ் என்ற புதிய பட்டுப்புடவை கடையை வரும் 12-ந் தேதி திறக்க உள்ளதாக தனது சமூகவலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த பதிவில், எனது அன்பான ரசிகர்களுக்கு, எனது தொழில் மற்றும் வாழ்க்கை முழுவதும் நீங்கள் சிறந்த ஆதரவு அமைப்பாக இருந்தீர்கள். இத்தனை வருடங்களாக நீங்கள் என் மீது பொழிந்த அன்புக்காக, உங்கள் அனைவருக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.
எவருக்கும் அவர்களின் கனவுகள் நனவாகும் என்பது வாழ்வில் சிறந்த விஷயம். நான் இப்போது ஒரு அற்புதமான மகிழ்ச்சியான தருணத்தில் இருக்கிறேன். நான் சொந்தமாக "சினேகாலயா சில்க்ஸ்" என்ற பட்டுப் புடவைக் கடையைத் தொடங்குகிறேன், எப்போதும் போல உங்கள் அன்பையும் ஆசீர்வாதத்தையும் தேடுகிறேன் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சினோகவுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“