தமிழ் சினிமா தொடங்கி பாலிவுட் வரை தனது கால்தடத்தை பதித்த நடிகை ஸ்ரீதேவி இப்போது இல்லை என்றாலும், அவரது புகழ் ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்கிறது என்பதை போற்றும் வகையில் இன்று அவரது பிறந்த நாள் குறித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி மற்றும் குஷி ஆகியோர் வெளியிட்டுள்ள பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
1963-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ந் தேதி தென் தமிழகத்தின் மீனம்பட்டி என்ற ஊரில் பிறந்தவர் ஸ்ரீதேவி. தமிழ் சினிமாவில் கடந்த 1967-ம் ஆண்டு வெளியான கந்தன் கருனை என்ற பக்தி படத்தில் முருகன் வேடத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தொடர்ந்து தமிழ் தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருந்தார், சிவாஜி எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
1976-ம் ஆண்டு இயக்குனர் இமயம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான மூன்று முடிச்சு படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான ஸ்ரீதேவி தனது முதல் படத்திலேயே இன்றைய முன்னணி நடிகர்களாக இருந்த கமல்ஹாசன், ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருந்தார். தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பல வெற்றிப்படங்களை கொடுத்த நிலையில், 1996-ம் ஆண்டு ஹிந்தி தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு தென்னிந்திய மொழிகளில் நடிக்காத ஸ்ரீதேவி, பாலிவுட் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்த நிலையில், அவருக்கு ஜான்வி மற்றும் குஷி என்ற இரு மகள்கள் உள்ளனர். கடைசியாக மாம் என்ற படத்தில் நடித்த ஸ்ரீதேவி, கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உறவினர் திருமணத்திற்காக தூபாய் சென்றிருந்தபோது அங்கேயே மரணமடைந்தார். தற்போது ஸ்ரீதேவி இல்லை என்றாலும், அவரது பிறந்த நாள் மற்றும் இறந்த நாளை ரசிகர்கள் ஞாபகம் வைத்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஸ்ரீதேவியின் பிறந்த நாளான இன்று ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், ஸ்ரீதேவியின் மகனான ஜான்வி கபூர் தனது அம்மாவுடன் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, ஹேப்பி பர்த்டே அம்மா ஐ லவ் யூ என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் ஸ்ரீதேவியின் பெயிண்டிங் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ஹேப்பி பர்த்டே மை ஜான் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“