90-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை சுகன்யா தனது சினிமா அனுபவம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
1991-ம் ஆண்டு பாரதி ராஜா இயக்கத்தில் புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சுகன்யா. தொடர்ந்து எம்ஜிஆர் நகரில் என்ற படத்தில் நடித்த அவர், தனது 3-வது படமான சின்னக்கவுண்டர் படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருதை பெற்றிருந்தார்.
அதன்பிறகு, செந்தமிழ்பாட்டு, வால்டர் வெற்றிவேல், சக்கரைதேவன், மகாநதி, இந்தியன், உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி என பல படங்களில் நடித்துள்ள சுகன்யா தற்போது இந்தியன் படத்தின் 2-ம் பாகத்தில் கமலுடன் நடித்து வருகிறார்.
திரைப்படம் மட்டுமல்லாமல் சீரியலிலும் நடித்துள்ளார். சுகன்யா. இவர் நடிப்பில் சன்டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் மலையாளத்திலும் சில டிவி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார். இதனிடையே தற்போது தனது சினிமா அனுபவம் குறித்து டூரிங் டாக்கீஸ் என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
இதில் தான் முதன் முதலில் திரையில் தோன்றியபோது எனக்கே என்னை பார்க்க ஆச்சரியமாகவும் மிகவும் சந்தோஷமாகவும் இருந்தது. எனது அப்பா அம்மாவும் என் முதல் படத்தை பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டார்கள். மேலும் திரைப்படங்களில் நடிப்பது இனி உன் விருப்பம் நீ முடிவு செய்தால் சரிதான் என்று எனக்கு சுதந்திரம் கொடுத்தார்கள்.
மேலும் முதல் படத்தில் நடித்த போது நாங்கள் சில பேர் அறிமுகமானோம். அதில் நெப்போலியன் ஒருவர். இதில் யார் இயக்குனரிடம் திட்டு வாங்குவார் என்று போட்டி இருக்கும். இந்த படத்தின் இயக்குனர் பாரதிராஜா என்ன சொல்லிக்கொடுத்தாரே அதைதான் நான் செய்தேன். அந்த அனுபவம் மிகவும் நன்றாக இருந்தது. அவர் சொல்லிக்கொடுத்ததைத்தான் இப்போவும் கடைபிடித்து வருகிறேன். இதன் பிறகு 3-வது படமே விஜயகாந்த் சாருடன் நடித்தேன்.
இந்த படத்தில் நடித்தபோது நான்தான் ஹீரோயின்னு அவருக்கு அறிமுகப்படுத்திவிட்டார்கள் ஆனாலும் அவருடன் நான் அதிகம் பேசவில்லை. ஒருமுறை சேர் எடுப்பதற்காக அவரிடம் சென்றபோது அவர் என்னை பார்த்து ஹா என்றார். அப்போது எனக்கு பயமா இருந்துச்சு. சேர் எடுத்துக்கிறேன் சொன்ன. சேர் தானே எடுத்துக்கோங்க என்று சொன்னார்.
அதன்பிறகு இந்த படத்தில் வரும் பம்பர சீனுக்காக இயக்குனர் என்னை பம்பரம் விட கற்றுக்கொள்ள சொன்னார். அதன்பிறகு ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு போனதும் பம்பரம் விட கற்றுக்கொண்டேன். ஆனால் அந்த சீன் இப்போதும் அதிகம் பார்க்கப்படுகிறது ஆபாசமாக இல்லாமல் சரியாக இயக்குனர் எடுத்திருந்தார் என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/