தமிழ் இந்தி, தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணநை்து பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகை தமன்னா, 'பாகுபலி' போன்ற பிரம்மாண்ட படங்களில் நடித்து உலக அளவில் ரசிகர்களைக் கவர்ந்தவர். ஆனால், இந்த உச்சத்தை தொடுவதற்கு முன்பு தான் சந்தித்த சிக்கல்கள் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
சமீபத்தில், ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், தனது ஆரம்ப காலப் போராட்டங்களையும், சினிமாவில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் பற்றி வெளிப்படையாகப் பேசினார். சினிமா துறைக்கு இளம் வயதிலேயே வந்த தமன்னா, மிக விரைவிலேயே ஒரு படத்தில் நடிகைகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருந்தாலும், தேவைப்பட்டால் அவர்களை எளிதாக மாற்றிவிடலாம் என்ற எண்ணம் இந்தத் துறையில் பரவலாக இருக்கிறது என்ற கசப்பான அனுபவத்தை பெற்றுள்ளார்.
இளம் நடிகைகளை எளிதாகக் கையாளலாம், அவர்கள் நம் பேச்சைக் கேட்பார்கள்" என்ற மனநிலை சிலரிடம் இருப்பதாகவும் கூறியுள்ள தமன்னா, ஒரு முன்னணி தென்னிந்திய நடிகருடன் இணைந்து ஒரு படத்தில் நடித்தபோது, ஒரு காட்சியில் மிகுந்த சங்கடம் ஏற்பட்டது. அதனால், அந்தக் காட்சியில் நடிக்க விருப்பமில்லை என்று அவர் படக்குழுவிடம் கூறியிருக்கிறார். ஆனால், அவரது இந்த முடிவு உடன் நடித்த நடிகருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
"நான் இந்தக் காட்சியில் நடிக்க சங்கடமாக உணர்கிறேன்" என்று சொன்னபோது, அந்த முன்னணி நடிகர் உடனடியாக, "ஹீரோயினை மாற்றிவிடுங்கள்" என்று அந்த படத்தின் ஹீரோ கோபமாகச் சொன்னதாக தமன்னா கூறியுள்ளார். மேலும், இது போன்ற சம்பவங்கள், ஒரு இளம் நடிகையின் தன்னம்பிக்கையைத் தகர்க்கும் முயற்சி என்றும், தன் வயது காரணமாகவே தான் பல முறை அவமானப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். இருப்பினும், இந்தச் சம்பவத்திற்கு அடுத்த நாள், அந்த நடிகர் தன் தவறை உணர்ந்து தமன்னாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
கோபத்தில் அப்படிச் சொல்லிவிட்டதாக அவர் வருத்தம் தெரிவித்தது, தமன்னாவுக்கு ஓரளவு ஆறுதலைக் கொடுத்தாலும், அந்த அனுபவம் சினிமா உலகின் அதிகாரப் போராட்டங்களை அவருக்கு உணர்த்தியது. தொடர்ந்து சினிமாவில் தான் சந்தித்த சவால்களைப் பற்றிப் பேசிய அதே நேரத்தில், தமன்னா தன்னைச் சுற்றிப் பரவிய வதந்திகளுக்கும் தெளிவான விளக்கம் அளித்தார். குறிப்பாக, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடன் அவர் காதல் உறவில் இருப்பதாகக் கூறப்பட்ட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதில், நாங்கள் இருவரும் ஒரு விளம்பரப் படத்தில் இணைந்து நடித்தோம். அது ஒரு நாள் மட்டுமே நடந்த ஷூட்டிங். அதன் பிறகு நான் அவரை சந்தித்ததுமில்லை, பேசியதுமில்லை. என்று அவர் அழுத்தமாகத் தெரிவித்தார். தற்போது பல படங்களில் நடித்து வரும் தமன்னா, இந்தியில் ஷாஹித் கபூர் மற்றும் திரிப்தி டிம்ரி உடன் இணைந்து விஷால் பரத்வாஜ் இயக்கும் 'ரோமியோ', 'ரேஞ்சர்', 'ஐபிஎஸ் மரியா', மற்றும் 'வ்வான்: ஃபோர்ஸ் ஆஃப் தி ஃபாரெஸ்ட்' ஆகிய நான்கு படங்களில் அவர் நடிக்கிறார்.