அரண்மனை 4 படத்திற்கு பிறகு இயக்குனர் சுந்தர்.சி அடுத்து கலகலப்பு படத்தின் 3-ம் பாகத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த படத்தில் நாயகியாக நடிக்க நடிகை வாணி போஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் சுந்தர்.சி பல காமெடி படங்களை இயக்கி வெற்றியை கொடுத்தவர். இவரது படங்களில் காமெடி காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், இந்த படங்கள் நிச்சயமாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு உண்டு. அதேபோல் அரண்மனை மற்றும் கலகலப்பு என்று தொடர்ந்து இந்த இரு படங்களில் தொடர்ச்சியை சுந்தர்.சி இயக்கி வருகிறார்.
ஏற்கனவே அரண்மனை படத்தின் 3 பாகங்கள் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், கடந்த மே 3-ந் தேதி வெளியான அரண்மனை படத்தின் 4-வது பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் 20 நாட்களில் ரூ100 கோடி வசூலித்து தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெற்றி பெற்ற படங்களில் வரிசையில் இணைந்துள்ளது. அரண்மனை 4 கொடுத்த வெற்றியை தொடர்ந்து சுந்தர்.சி அடுத்து கலகலப்பு படத்தின் 3-ம் பாகத்தை இயக்க உள்ளார்.
கலகலப்பு முதல் பாகத்தில் நடித்த விமல் மற்றும் சிவா இந்த படத்தில் மீண்டும் முக்கிய வேடங்களில் இணைய உள்ளனர். இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை வாணி போஜன் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினரை தயாரிப்பாளர்கள் இன்னும் உறுதி செய்யவில்லை.
விமல், சிவா, சந்தானம், அஞ்சலி மற்றும் ஓவியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த 'கலகலப்பு' திரைப்படம் 2012ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. படத்தின் 2-ம் பாகமாக 'கலகலப்பு 2' ஜெய், ஜீவா, சிவா, நிக்கி கல்ராணி மற்றும் கேத்தரின் தெரசா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஆனால் முதல் பாகத்தில் திருடனாக இருந்த சிவா, 2-ம் பாகத்தில் வேறு ஒரு இடத்திற்கு சென்று ஏமாற்றுவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது படமான 'கலகலப்பு 3' மீண்டும் தயாராக உள்ளது. இந்த படத்தில் முதல் பாகத்தில் இருந்த சிவா மற்றும் விமல் கதையின் தொடர்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“