தமிழ் சினிமாவில் வைரல் நாயகியாக வலம் வரும் வனிதா விஜயகுமார் தான் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ள மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வனிதா விஜயகுமார் அடுத்து, ராஜ்கிரனுக்கு ஜோடியாக மாணிக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். திருமணத்திற்கு பிறகு, நடிப்பில் இருந்து விலகிய அவர், ஒரு கட்டத்தில் திருமணத்தின் மூலமாகவே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். விஜய் டிவியின், பிக்பாஸ், குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று மீண்டும் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பல பட வாய்ப்புகளை பெற்றிருந்த வனிதா, சமீபத்தில் வெளியான பிரஷாந்தின் அந்தகன் படத்தில் சமுத்திரக்கனியின் மனைவி கேரக்டரில் நடித்து அசத்தியிருந்தார். இதனிடையே தற்போது வனிதா இயக்குனராக தமிழ் சினிமாவில் களமிறங்கியுள்ளார். ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு வெளியான எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என்ற படத்தை தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு வனிதாவுடன் இணைந்து கதை திரைக்கதை அமைத்திருந்த ராபர்ட் மாஸ்டர் படத்தை இயக்கியிருந்தார்.
தற்போது இவர்கள் இருவரும் 2-வது முறையாக இணைந்துள்ள படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர். ராபர்ட் மாஸ்டர் வனிதா இணைந்து நடித்துள்ள இந்த படத்தை வனிதாவே கதை திரைக்கதை எழுதி இயக்கி தயாரித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் பாடல்கள் டிரெய்லர் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளார்.
அதன்படி, வரும் மே 25-ந் தேதி படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியாகும் என்று அறிவித்துள்ள வனிதா விஜயகுமார், படத்தின் வெளியீட்டை குறிக்கும் வகையில் ஜூன் மாதம் டெலிவரி என்று குறிப்பிட்டு, தான் கர்ப்பமாக இருக்கும்போது வயிற்றில் ராபர்ட் மாஸ்டர் முத்தமிடும் போட்டோவை பகிர்ந்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், யார் என்ன பேசினாலும், உங்களுக்கு புடிச்சத நீங்க பண்ணிக்கிட்டே இருங்க என்று கூறியுள்ளார். பலரும் வெயிட்டிங் என்று கூறியுள்ள நிலையில், ஒரு சிலர் இதற்கு கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
அதில் ஒருவர் என்ன கொடூரம் என்றும், இவங்க வேற என்று பதிவிட்டு வருகின்றனர். அதேபோல் இந்த படத்திற்காக தங்கள் காத்திருப்பதாகவும் ஒரு சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் வெளியிட்ட ஒரு வீடியோவில் செல்லமே நீ வரும் நேரம் என்று பதிவிட்டிருந்தார். அதை பார்த்த நெட்டிசன்கள் கடுமையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.