விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி நடிப்பில் வெளியானி ஃபீனிக்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், சூர்யா சேதுபதி குறித்து நெகடீவ் விமர்சனங்கள் அதிகமாகி வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகை வனிதா குரல் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகிகளின் பட்டியலை எடுத்துக்கொண்டால் அதில் நிச்சயமாக வனிதா விஜயகுமார் பெயர் இருக்கும். இவர் எதை பேசினாலும் அதில் ஒரு சர்ச்சை சுற்றிக்கொண்டே இருக்கும் என்று நெட்டிசன்களால் அதிகம் வைரலாக்கப்பட்டு வரும். அதே சமயம் எதையும் வெளிப்படையாக பேசும் தைரியம் கொண்டவர் தான் வனிதா.
தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள அவர் மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தை இயக்கி ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன் பணிகளில் வனிதாவும், அவரது மகளும் படத்தின் தயாரிப்பாளருமான ஜோவிகாவுடன் பங்கேற்று வருகிறார். இதனிடையே, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வனிதா விஜயகுமார், சூர்யா சேதுபதி பற்றிய விமர்சனங்களுக்கு தளபதி விஜயை ஒப்பிட்டு பதில் அளித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், விஜய் சேதுபதி பையனை பற்றி நான் பார்த்தேன். எனது அனுபவத்தில் சொல்கிறேன். இன்றைக்கு ட்ரோல் செய்யப்படும் அந்த பையன் வருங்காலத்தில், தளபதி மாதிரி ஒரு ஸ்டாரா மாறுவதற்கான ஒரு அறிகுறிகள் தான் அது. சூர்யா சேதுபதியை பார்க்கும்போது விஜய் நாளை தீர்ப்பில் பார்த்த மாதிரி தான் எனக்கு தோன்றியது. விஜய் படம் கோயம்புத்தூர் மாப்பிள்ளை, சந்திரலேகா, தேவா எதோ ஒரு படம் வெளியான சமயத்தில் தியேட்டரில் கொசு அடிததார்கள், அதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன்.
விஜய்க்கே இது தெரியும் அவரை பற்றி எவ்வளவு விமர்சனங்கள் வந்தது என்று, அதை தாண்டி ஓடி போராடி இன்றைக்கு தளபதியா, வருங்கால முதல்வரா ஒரு கட்சிக்கே தலைவராக ஆகும் அளவுக்கு வளர்ந்துள்ளார். இதுதான் சினிமா தமிழக மக்கள். தமிழக மக்கள் அன்பு வைத்துவிட்டாகள் என்றால் கைவிட மாட்டார்கள். இதை சூர்யா மைன்டில் வைத்துக்கொண்டு, அவனது அப்பா மாதிரி பெரிய நடிகரா வரனும். அதுதான் ஜோவிகாவுக்கும்.
த்ரிஷா, நயன்தாரா வந்த புதிதில் எல்லோரும் பேசியிருக்கிறார்கள். இப்போது அவர்களின் பழைய படங்களை பார்த்தால் என்ன இப்படி இருக்கிறார் என்று நமக்கே தோன்றும். எல்லோரும் அந்தந்த வயதில் இருந்து வளரட்டும். ஒரு வெற்றிக்கு பின் இன்னொரு வெற்றி. ஒரு வயது வரும்போது ஒரு மெச்சுரிட்டி கிடைக்கும். அதன்பிறகு வயதாகிவிட்டது என்று சொல்வீர்கள் என்று கூறியுள்ளார். விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படம் தான் வனிதா தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படம் என்பது குறிப்பிடத்தக்து.