துணிவு படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், படத்தின் நாயகன் அஜித் தனது விடுமுறையை கொண்டாடும் வகையில் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அவர் சென்னை விமான நிலையம் வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
இயக்குனர் எச்.வினோத், நடிகர் அஜித், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் துணிவு. வங்கி கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11-ந் தேதி வெளியிடப்பட்டது.
மஞ்சுவாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள துணிவு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இதுவரை ரூ 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதுவரை துணிவு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் வரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் தனது விடுமுறையை கொண்டாட வெளிநாடு சென்றுள்ளார். தனது தனிப்பட்ட விஷயங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகிவிட கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் அஜித், பொது இடங்களில், வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுப்பதை தவிர்த்துவிடுவார்.
After the Blockbuster success of #Thunivu , #AK is off to a trip..
— Ramesh Bala (@rameshlaus) January 25, 2023
A video from #Chennai Airport earlier this morning.. pic.twitter.com/QfIrSCA9fs
ஆனால் தற்போது அவர் வெளிநாடு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தபோது ரசிகர்கள் அவரை புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்துள்ளனர். அப்போது அதனை தவிர்க்காமல் இருந்த அஜித் சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளார். துணிவு படத்தின் படப்பிடிப்பின்போது கிடைத்த இடைவெளியில் இந்தியா முழுவதும் தனது பைக்கில் சுற்றுலா சென்றவர் அஜித்.
இந்தியா மட்டுமல்லாமல், பாங்காக்கில் துனிவு படப்பிடிப்பின் போது கூட, அங்கும் பைக் பயணம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், துணிவு படம் வெளியாவதற்கு முன்பு, அஜித் தனது பைக் பயணத்தில் இந்தியாவையே சுற்றி வந்துள்ளதாக அவரது மேனேஜனர் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே துணிவு படத்திற்கு பிறகு அஜித் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக ஏ.கே.62 என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம், காதலை மையமாக கொண்ட படமாக இருக்கும் என்றும், நடிகர் அரவிந்த் சாமி, த்ரிஷா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil