துணிவு படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கல் தினத்தை முன்னிட்டு அஜித் நடிப்பில் வெளியான துணிவு படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்து வருகிறது. எச்.வினோத் இயக்கிய இந்த படத்தில் மஞ்சுவாரியார் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். துணிவு படம் தற்போதுவரை 175 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், துணிவு படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகவும், இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்ட நிலையில், படத்திற்கு தற்காலிகமாக ஏ.கே.62 என்ற டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. அனிருத் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் இந்த படத்தில் அஜித்க்கு ஜோடியாக நடிக்க த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், தற்போது நாயகனாக மாறியுள்ள சந்தானம் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், விக்னேஷ் சிவன் கூறிய கதை லைகா நிறுவனத்திற்கும், நடிகர் அஜித்துக்கும் திருப்திகரமாக இல்லாத நிலையில், விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தடையற தாக்க, தடம், மீகாமன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேனி அஜித்தின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் சமீபத்தில் வெளியாக கலகத்தலைவன் படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் கடந்த 2019-ம் ஆண்டு விஜய் நடிப்பில் ஒரு படத்தை மகிழ் திருமேனி இயக்குவார் என்று தகவல் வெளியான நிலையில், இருவருக்கும் இடையே படம் தொடர்பான சந்திப்பும் நடந்ததாக கூறப்பட்டது.
அப்போது மகிழ் திருமேனியின் கதைக்கு விஜய் ஓகே சொல்லியிருந்தாலும், அதன்பிறகு படம் தொடங்குவதற்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனிடையே விஜய்க்காக மகிழ் திருமேனி சொன்ன கதையில் தான் தற்போது அஜித் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து விலகியது குறித்து பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/