அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான விடா முயற்சி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், அவரது நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், படத்தின் டீசர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
தமிழ் சினிமாவில் த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு நடிப்பில் அன்பானவன், அசராதவன், அடங்காதவன் என்ற படத்தை இயக்கினார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. பாக்ஸ் ஆபீஸில் படம் தோல்வியை தழுவியது. அதன்பிறகு சல்மான் கான் நடிப்பில் வெளியான தபாங் 3 படத்திற்கு தமிழில் வசங்கள் எழுதியிருந்தார்.
இதனிடையே, பிரபுதேவா நடிப்பில், பஹீரா என்ற படத்தை இயக்கிய ஆதிக், அடுத்து விஷால் – எஸ்.ஜே.சூர்யா நடிப்பில், வெளியான மார்க் ஆண்டனி என்ற படத்தின் மூலம் பெரிய வெற்றியை கொடுத்தார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி என்ற படத்தை இயக்கியுள்ளார். அஜித் நடிப்பில், எச்.வினோத் இயக்கிய, நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த ஆதிக், அப்போது அஜித்துடன் பழகும் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தற்போது அவரது படத்தை இயக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார்.
அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜூன் தாஸ், பிரசன்னா, சுனில் யோகிபாபு, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தற்போது ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படம் வரும் ஏப்ரல் 10-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் படத்தில் நடித்து வரும் த்ரிஷாவின் கேரக்டர் இன்ட்ரோ கொடுக்கப்பட்டது.
இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு, குட் பேட் அக்லி திரைப்படத்தில், டீசர் எப்போது என்பது குறித்து ஒரு சின்ன டீசர் வெளியிடப்பட்டது. அதில், பிப்ரவரி 28-ந் தேதி குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என்று குறிப்பிட்டிருந்த நிலையில், இன்று மாலை 7 மணிக்கு, டீசர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது டீசர் வெளியிடப்பட்டுள்ளது. கேங்ஸ்டராக அஜித், 3 விதமாக கெட்டப்களில் வருகிறார்.