எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உலகம் முழுவதும் இன்று பிரம்மாண்டமாக துணிவு படம் வெளியாகி இருக்கிறது. நள்ளிரவு ஒரு மணிக்கு ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையிடப்பட்டது. ஏற்கனவே ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியது அந்த எதிர்பார்ப்புகளை இப்படம் பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்ப்போம்.
நாயகன் அஜித் தன் கும்பலுடன் சேர்ந்து தமிழகத்தில் உள்ள ஒரு வங்கியில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டுகிறார்.அதன்படி நாயகனும் அவரது கும்பலும் பேங்க் உள்ளே சென்று கொள்ளையடிக்க துவங்குககிறார்கள், ஆனால் அங்கு எதிர்பாராத விதமாக நிறைய சம்பவங்கள் நடைபெறுகிறது அதை முறியடித்து பணத்தை எப்படி கொள்ளை அடித்தார் என்பதையும் அதன் பிறகு அந்த பணம் எதற்காக கொள்ளையடிக்கப்பட்டது என்பதையும் அப்பணத்தை அஜித் எதற்காக பயன்படுத்துகிறார் என்பதையும் ஆக்சன் கலந்த திரில்லராக சொல்லியிருக்கும் படமே துணிவு.
அஜித் ஒன் மேன் ஷோவாக படம் முழுக்க அதிரடி காட்டுகிறார். வழக்கமாக அஜித்துக்கு என்று சில மேனரிசங்கள் உண்டு,ஆனால் அதை எல்லாம் தவிர்த்து ஒரு ஜாலியான ஃபன் ஆன புது அஜித்தை பார்க்க திரையில் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. தனது உடல் தோற்றத்திற்காக "வலிமை" படத்தில் பெரிதும் விமர்சிக்கப்பட்ட அஜித், அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இப்படத்தின் அவரது தோற்றமும், கெட்டப்பும் மிரள வைக்கிறது. வாலி, மங்காத்தா படங்களுக்குப் பிறகு வில்லத்தனம் கலந்த நடிப்பில் அஜித் மிரட்டி இருக்கிறார்.
அவருடைய மேனரிசம் பல இடங்களில் நம்மை ஆச்சரியப்படுத்தி குதூகலப்படுத்துகிறது. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக மைக்கேல் ஜாக்சன் நடனமாடி இப்படத்தில் திகைக்க வைத்துள்ளார். மேலும் ஆக்சன் காட்சிகளிலும், துப்பாக்கியை அவர் கையாளும் விதத்திலும் ஒரு ஹாலிவுட் ஹீரோவிற்கு நிகராக அதிரடி காட்டி இருக்கிறார் அஜித். பொதுவாகவே அஜித் படங்களில் காமெடி சற்று குறைவாகவே இருக்கும், ஆனால் இந்த படத்தில் அஜித்தே இறங்கி கலாய்த்திருப்பது படத்தை மேலும் ரசிக்க உதவுகிறது. இந்த மாதிரி சமூக கருத்துள்ள படத்தில் துணிவாக நடித்ததற்கு அஜித்திற்கு சல்யூட்.
அஜித்திற்கு பிறகு படத்தில் அதிகம் ஈர்க்கப்பட்டது மஞ்சுவாரியரின் கதாபாத்திரம். வழக்கமான நாயகியாக இல்லாமல் இப்படத்தில் அவரது தோற்றமும், அவரது கதாபாத்திரம் எழுதப்பட்டிருக்கும் விதமும் தமிழ் சினிமாவின் நாயகிகளை மற்றொரு தளத்திற்கு எடுத்து செல்வதாக அமைந்திருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்து அசத்தியிருக்கிறார் மேலும் பைக் ஓட்டுவது, கப்பல் ஓட்டுவது என அனைத்து சாகசங்களையும் திரையில் நிகழ்த்தி இருக்கிறார் மஞ்சு வாரியார்.
போலீஸ் அதிகாரியாக வரும் சமுத்திரக்கனி தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை கம்பீரமாகவும், சிறப்பாகவும் செய்துள்ளார். மேலும் ஜி.எம். சுந்தர்,பகவதி பெருமாள் ஆகியோர் அஜித்துடன் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் திரையரங்கையே சிரிப்பலையில் ஆழ்த்துகிறது. வில்லனாக வரும் ஜான் கொக்கின் நாயகனை விட சற்று பலம் குறைந்தது போன்று தோற்றமளித்தாலும் அவருடைய வில்லத்தனம் மிரள வைக்கிறது. தர்ஷனுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிப்பதற்கு ஒரு நல்ல படமாக இது அமைந்திருக்கிறது மேலும் மகாநதி சங்கர், பாவனி,பிரேம்,வீரா ஆகியோரும் தங்களது கதாபாத்திரத்தை தங்கள் நடிபின்மூலம் நியாயப்படுத்தி உள்ளனர்.
பணத்தைப் பற்றியும் பணத்தின் மூலம் சாமானிய மக்களை வங்கிகள் எப்படி ஏமாற்றுகிறது என்பதையும் துணிச்சலாக திரைக்கதை அமைத்து வினோத் படமாக்கி இருப்பது பாராட்டுக்குரியது. அவர் வெளிப்படுத்தி இருக்கும் பணத்தின் மீதான காட்சி அமைப்புகளும், கதாபாத்திரங்களும், வசனங்களும் நம்மை போன்ற சக மனிதனின் சமூக கோவத்தை வெளிப்படுத்தும் ஒரு கண்ணாடியாக இரண்டாம் பாதியின் திரைக்கதை அமைந்துள்ளது. படம் ஆரம்பித்ததில் இருந்தே நேரடியாக கதைக்கு சென்றிருப்பது ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைக்கிறது.
மேலும் படத்தின் முதல் பாதி ஜெட் வேகத்தில் செல்கிறது இரண்டாம் பாதியில் அஜித் ஏன் இதையெல்லாம் செய்தார் என்ற சஸ்பென்ஸ் விலகும் போது நம்மளையும் அறியாமல் கைத்தட்ட தோன்றுகிறது. படத்தின் வன்முறை காட்சிகள் கொஞ்சம் அதிகமாகவே காட்டப்படுகிறது என்பது சற்று நெருடலே. மொத்தத்தில் பெரும்பாலானோர் பேச தயங்கும் ஒரு சமூக கருத்தை அஜித் என்னும் மாபெரும் திரை பிம்பத்தின் மூலம் மக்களுக்கு அழகாகவும்,ஆழமாகவும், எதார்த்தமாகவும், சுவாரசியமாகவும் சொல்லியிருக்கும் ஒரு திரில்லர் படமாக துணிவு அமைத்திருக்கிறது.
நவீன் குமார்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.