/indian-express-tamil/media/media_files/2025/09/10/nayantharaasa-2025-09-10-14-21-40.jpg)
நடிகை நயன்தாரா ஆவண படத்தில் அனுமதி இன்றி சந்திரமுகி பட காட்சிகளை பயன்படுத்தியதாக மீது, ஏ.பி.இன்டர்நேஷ்னல் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், பதில் மனு தாக்கல் செய்ய ஆணவப்பட தயாரிப்பு நிறுவனத்திற்கு, அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து, பியாண்ட் தி ஃபேரி டேல் என்ற தலைப்பில், ஆவணப்படம் ஒன்று வெளியிடப்பட்டது. டார்ச் ஸ்டுடியோஸ் தயாரித்த இந்த ஆவணப்படம், கடந்த 2024 நவம்பர் மாதம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியானது. இந்த ஆவணப்படம் வெளியானது முதலே பல்வேறு சர்ச்சைகளையும், காப்பிரைட் பிரச்னைகளையும் சந்தித்து வருகிறது.
இந்த ஆவணப்படம், வெளியான சில நாட்களிலேயே, நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம், தங்கள் தயாரித்த நானும் ரவுடிதான் திரைப்படத்தின் காட்சிகள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாகக் கூறி, இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இதனிடையே தற்போது, சந்திரமுகி திரைப்படத்தின் காப்புரிமை உரிமையாளரான ஏ.பி இன்டர்நேஷனல் நிறுவனம், நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த ஆவணப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் ஜோதிகா நடித்த சந்திரமுகி படத்தின் சில பகுதிகள் அனுமதி பெறாமல் சேர்க்கப்பட்டுள்ளதாக புதிய வழக்கை தாக்கல் செய்தது. 2005-ல் வெளியான அந்த திரைப்படத்தில் நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். சந்திரமுகி படத்தின் காட்சிகளை நீக்க வேண்டும் என்றும், ரூ5 கோடி இழப்பீடு கோரியும் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியும், அந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படாமல் ஆவணப்படம் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருவதாக மனுதாரரான ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது,
மேலும், சந்திரமுகி படத்தின் காட்சிகளைப் பயன்படுத்த டார்ச் ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்குத் தடை விதிக்க வேண்டும், அந்த காட்சிகளை ஆவணப்படத்திலிருந்து நீக்க உத்தரவிட வேண்டும், ஆவணப்படத்தின் மூலம் ஈட்டிய வருவாய் குறித்த கணக்குகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், டார்ச் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது பதில் மனுவை தாக்கல் செய்ய அக்டோபர் 6-ம் தேதி வரை அவகாசம் அளித்த நீதிமன்றம், வழக்கின் அடுத்த விசாரணையை அந்தத் தேதிக்கு ஒத்திவைத்தது. இதனால் இந்த விவகாரம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.