கமல்ஹாசன் வித்தியாசமான நடிப்பில் வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்த நடிகர் மோகன் மதுரை திரும்பரங்குன்றம் பகுதியில் ஆதரவற்ற நிலையில், இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1989-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் அபூர்வ சகோதரர்கள். கமல்ஹாசன் 3 வேடங்களில் நடித்திருந்த இந்த படத்தில் ஒரு வேடத்தில் சர்க்கஸ் செய்யும் குள்ள மனிதராக நடித்திருப்பார். இந்த கேரக்டர் இன்றைக்கும் பேசப்படும் ஒரு கேரக்டராக அமைந்துள்ளது. இந்த கேரக்டருடன் சேர்ந்து நிஜமான 4 குள்ள மனிதர்கள் நடித்திருந்தனர். அதில் ஒருவர் தான் மோகன்.
சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்த சின்னு என்பவரின் மகன் மோகன். திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து வந்த இவர், கமல்ஹாசனின் அபூர்வசகோதரர்கள் படத்தில் நடித்திருந்தார். கமல்ஹாசனுடன் நடித்திருந்தாலும் அன்பிறகு அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்காத நிலையில், பாலா இயக்கத்தில் ஆர்யா நடித்த நான் கடவுள் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார்.
இதனிடையே சரியான படவாய்ப்பு இல்லாததால் சில ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊரைவிட்டு மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் வசித்து வந்த மோகன், வறுமையின் காரணமாக பிச்சை எடுத்து வந்ததாக கூறப்படும் நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு (ஜூலை 31) மதுரை ரத வீதியில் ஆதரவற்ற நிலையில், இறந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மோகனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தொடர்ந்து மேட்டூரில் உள்ள மோகனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை முடிந்து மோகனின்ன உடல் சொந்த ஊரான மேட்டூருக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. மோகன் குடும்பம் குறித்து காவல்துறையினர் விசாரித்ததில் அவருக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் மூன்று சகோதரிகள் இருப்பது தெரியவந்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“