தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் தொடங்கி முன்னணி நடிகர்கள் பலருக்கும் தனது இசையால் பெரிய வெற்றியை கொடுத்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ஒரு சில பாடல்களை மட்டும் பாடியுள்ளார். அந்த வகையில், ஏ,ஆர்.ரஹமான் இசையில், பாடிய பாடல் குறித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியனிடம் எம்.எஸ்.விஸ்வநாதன் போன் செய்து பெருமையாக பேசியுள்ளார்.
எம்.எஸ்.விஸ்வநாதன், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு பாடல் பாட வந்த வாய்ப்பை மறுத்தாலும், இறுதியில் அந்த பாடலை தனது ஸ்டைலில் பாடி அசத்தியுள்ளார். கடந்த 1999-ம் ஆண்டு இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான படம் சங்கமம். ரஹ்மான், விந்தியா, மணிவண்ணன், விஜயகுமார், ராதாரவி, வடிவேலு, சார்லி, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
கவிஞர் வைரமுத்து அனைத்து பாடல்களையும் எழுதியிருந்த இந்த படத்தில் ‘’ஆளால கண்டா’’ என்ற பாடல் இன்றுவரை பலரின் பாராட்டுக்களை பெற்று வரும் ஒரு பாடலாக காலம் கடந்து நிலைத்திருக்கிறது. இந்த பாடலை எம்.எஸ்.விஸ்வநாதன் தான் இந்த பாடலை பாட வேண்டும் என்று நினைத்த ஏ.ஆர்.ரஹ்மான், இதற்காக அவரை தொடர்புகொண்டபோது, டியூனையும் பாடலையும் அனுப்பி வையுங்கள் பார்த்துவிட்டு சொல்கிறேன் என்ற கூறியுள்ளார்.
அதன்படி ஏ.ஆர்.ரஹ்மான் டியூன் மற்றும் பாடலை அனுப்ப, முதலில் வரும் ஹம்மிங்கை பார்த்த எம்.எஸ்.வி இது நமக்கு சரிப்பட்டு வராது என்று சொல்ல, அவரது மனைவி, நீங்கள் போய் பாடிவிட்டு வாருங்கள் என்று கூறியுள்ளார். அதன்பிறகு ஒப்புக்கொண்டு அந்த பாடலை பாடி முடித்துள்ளார். பாடல் பதிவின்போது டியூனை கேட்ட எம்.எஸ்.வி, பாட்டு சொல்லிக்கொடுங்க தம்பி என்று கேட்டுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சியான ஏ.ஆர்.ரஹ்மான், உங்களுக்கு நான் எப்படி சொல்லிக்கொடுக்க முடியும். நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு பாடுங்கள் இதுதான் டியூன். இப்படியே நீங்கள் பாட வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால் நான் இசையமைப்பாளராக இருக்கும்போது பாட்டு சொல்லிக்கொடுப்பேன் என்று சொல்ல, அதன்பிறகு எம்.எஸ்.வி எப்படி பாட வேண்டும் என்று ரஹ்மான் கூறியுள்ளார்.அதன்பிறகு எம்.எஸ்.வி அதில் கொஞ்சம் மாற்றங்கள் செய்து தனது ஸ்டைலில் பாடலை பாடியுள்ளார்.
இந்த பாடல் குறித்து எஸ்.பி.பி.பிடம் பேசிய எம்.எஸ்.வி, என்னை பாடல் பாட கூப்பிட்டார் தம்பி என்று குழந்தைத்தனமாக பேசியுள்ளார். அதன்பிறகு, பாட்டு சொல்லிக்கொடுங்கள் என்று சொன்னேன். அவர் சொல்லிக்கொடுக்கும்போது தான் எனக்கு தெரிந்தது நான் இசையமைப்பாளராக இருந்து எவ்வளவு சிங்கர்களை தொல்லைப்படுத்தி இருக்கிறேன் என்று. அதன்பிறகு நான் பாடல் பாடினேன். வேறு விதமா பாடுங்க என்று சொன்னார். நான் எனக்கு தெரிந்த மொத்தத்தையும் பாடிவிட்டேன்.
கடைசியில் பாடல் கேட்கலாமா தம்பி என்று கேட்டபோது இல்ல அண்ணே எடிட்டிங் பண்ணணும் என்று சொன்னார். நான் ஓஹோ நாம பாடியது இவருக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் நம் வந்தவுடன் ஆசீவாதம் வாங்குவது போல் வேலைகளை செய்துள்ளார் என்று நினைத்துக்கொண்டேன். ஆனா பெரிய சம்பளம் கொடுத்தார் தம்பி. அதன்பிறகு ரேடியோவில் ஒருநாள் இந்த பாட்டு போட்டாங்க நானே அசந்துட்டேன். நான் பாடியது வேறு, அவர் ஆர்கேஸ்ட்ரா எல்லாம்போட்டு பிரமாதப்படுத்த என்னையும் ஒரு சிங்கர் ஆக்கிட்டார் தம்பி என்று எம்.எஸ்.வி வெகுளித்தமாக கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.