தமிழ் சினிமாவில் தான் இசையமைத்த முதல் படத்திற்கே தேசிய விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான், முதன் முதலில் இசையமைத்த ரோஜா படத்தில் இடம்பெற்ற சின்ன சின்ன ஆசை பாடல் இன்றுவரை ஹிட்டாக உள்ளது. ஆனால் இந்த பாடல் இந்த படத்திற்காக எழுதப்பட்டது அல்ல என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
Advertisment
இசையமைப்பாளர் இளையராஜா மூலம் சினிமாவில் கவிஞராக அறிமுகமானவர் வைரமுத்து. இவர்கள் கூட்டணியில் வெளியான பல பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு கட்டத்தில் இந்த கூட்டணி பிரிந்த நிலையில், இளையராஜா மற்ற கவிஞர்களுடன் இணைந்து பயணிக்க தொடங்கினார். ஆனால் வைரமுத்துவுக்கு சரியாக வாய்ப்புகள் இல்லை.
ஒரு சில இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்கள் எழுதினாலும் அந்த பாடல்கள் அவ்வளாக வெற்றி பெறாத நிலையில், 1989-91 வரை வைரமுத்து தனக்கு ஓய்வு கிடைக்கும்போது, இசையமைப்பாளர் சம்பத் என்பரை அழைத்து சென்று, இசையமைக்க சொல்லி பல பாடல்களை எழுதியுள்ளார். அப்படி எழுதப்பட்ட பாடல் தான் ‘சின்ன சின்ன ஆசை’ என்ற பாடல். இந்த பாடலை முழுக்க முழுக்க கவிதை நடையில் எழுதிய வைரமுத்து சில இசையமைப்பாளர்களிடம் கொடுத்துள்ளார்.
அந்த காலக்கட்டத்தில் பிஸியாக இருந்த எஸ்.ஏ.ராஜ்குமார் இந்த பாடலை பார்த்துவிட்டு, படத்தில் சேர்க்க பார்க்கலாம் என்று கூறியுள்ளார். அதன்பிறகு வித்தியாசாகரிடம் சென்றபோது, முழுக்க முழுக்க கவிதையாக இருக்கிறதே என்று கூறியுள்ளார். அதன்பிறகு இந்த பாடல் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் சென்றுள்ளர். இதை பார்த்த அவர், தூர்தர்ஷன் சேனலுக்காக இந்த பாடலுக்கு இசையமைத்து கொடுத்துள்ளார். ஆனாலும் இந்த பாடல் இப்போது கிடைப்பதில்லை.
Advertisment
Advertisement
அதன்பிறகு 1992-ம் ஆண்டு வெளியான ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாக ஏ.ஆர்.ரஹ்மான் இந்த பாடலை பார்த்துவிட்டு தான் இசையமைப்பதாக கூறியுள்ளார். அதன்படி இந்த பாடல் இசையமைக்கப்பட்டு படத்தில் சேர்க்கப்பட்டு வெளியானது. இப்படி பல இசையமைப்பாளர்களின் கையில் சென்று படத்தில் சேர்க்கப்படாத இந்த பாடல், ஏ.ஆர்.ரஹ்மான் கையில் கிடைத்து படத்தில் இடம் பெற்று இன்றுவரை தனித்தன்மையுடன் நிலைத்திருக்கிறது ‘சின்ன சின்ன ஆசை’ பாடல்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“