தமிழ் சினிமாவின் ஆக்ஷன் கிங் அர்ஜூன் தனது மருமகனும், நடிகருமான உமாபதி தம்பி ராமையாவுக்கு பட வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் ஒரு படத்தை தானே தயாரித்து இயக்கி அவரை ஹீரோவாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ள அர்ஜூன், தான் நடித்த ஒரு படத்தின் 2-ம் பாகமாக இந்த படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில், இயக்குனர், தயாரிப்பாளர் நடிகர் என பன்முக திறமை கொண்டவர் அர்ஜூன். ஆக்ஷன் கிங் என்று அழைக்கப்படும் இவர், தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். மேலும் வெள்ளித்திரை மட்டுமல்லமாமல் சின்னத்திரையிலும் கால் பதித்திருந்த அர்ஜூன் ஜீ தமிழின் சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில், போட்டியாளராக பங்கேற்றவர் உமாபதி ராமையா.
நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி அர்ஜூனிடம் நல்ல பெயர் பெற்ற, இவர், அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிந்ததை தொடர்ந்து எளிமையாக நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டு, சமீபத்தில் இவர்கள் திருமணமும் நடைபெற்றது. இதனிடையே மருமகனுக்கு வரதட்சனை கொடுக்கும் வகையில், அர்ஜூன் அவரை வைத்து புதிய படத்தை இயக்கி தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் வெளியான நரசிம்ம நாயுடு என்ற படத்தை ரீமேக் செய்து தமிழில் ஏழுமலை என்ற பெயரில் இயக்கி நடித்தார் அர்ஜூன். அண்ணன்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் ஒரு தம்பி அண்ணன்கள் தன்னை மதிக்கவில்லை என்றாலும், தனது பாசத்திற்காக மனைவியையே பிரியும் அளவுக்கு செல்வது ஏழுமலை படத்தின் கதை. ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இருக்கும் இந்த படத்தில் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.
அர்ஜூன் சிம்ரன் நடித்து கடந்த 2002-ம் ஆண்டு வெளியான இந்த படத்தின் 2-ம் பாகத்தை அர்ஜூன் தற்போது இயக்க உள்ளதாகவும், இந்த படத்தில் உமாபதி ராமையா நாயகனாக நடிக்க உள்ள நிலையில், அவரது மனைவியும் அர்ஜூனின் மகளுமான ஐஸ்வர்யா அவருக்கு நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமணத்திற்கு முன்பு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்காத நிலையில், திருமணத்திற்கு பிறகு அப்பாவின் இயக்கத்தில் தனது கணவருடன் ஐஸ்வர்யா இணைந்து நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“