சமீப காலமாக சாதி மையமாக வைத்து பல படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் அருள்நிதியின் “கழுவேத்தி மூர்க்கன்”இன்று வெளியாகியிருக்கிறது. இந்த படம் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளதா?
கதைக்களம்
மேலத் தெருவில் வசிக்கும் அருள்நிதி, கீழத் தெருவில் வசிக்கும் சந்தோஷ் பிரதாப் இருவரும் சிறு வயதில் இருந்தே உயிர் நண்பர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் சாதி பாசமிக்க அருள்நிதியின் அப்பாவிற்கு இது பிடிக்கவில்லை.மேலும் அருள் நிதியின் அப்பா இருக்கும் கட்சியின் மாவட்ட செயலாளரான ராஜசிம்மன் தன்னுடைய பலத்தை நிரூபிப்பதற்காக அங்கு ஒரு பிரம்மாண்ட கூட்டத்தை ஏற்பாடு செய்கிறார் அதற்காக பல பேனர்கள் வைக்கப்படுகிறது.
அதில் ஒரு பேனரை அருள்நிதியின் நண்பர் கிழித்து விடுகிறார். இதனால் ராஜசிம்மனின் மாவட்ட செயலாளர்கள் பதவி பறிபோகிறது. இதனால் கோபமடைந்த ராஜசிம்மன் அருள்நிதியின் நண்பரை கொலை செய்து விட்டு அந்த பழியை அருள்நிதி மீது போடுகிறார். இதற்காக அவரை போலீஸ் தேட,மறுமுனையில் தன் நண்பனை கொன்றவர்களை பழிதீர்க்க களம் இறங்குகிறார் அருள்நிதி,அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் மீதி கதை.
நடிகர்களின் நடிப்பு
“வம்சம்” படத்திற்குப் பிறகு ஒரு முழு நீள கிராமத்து இளைஞன் வேடம் அருள்மிகு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. இதுவரை அருள்நிதியை நாம் அதிகம் ஆக்சன் காட்சிகளில் பார்த்ததில்லை என்ற விமர்சனத்திற்கு இப்படத்தின் சண்டைக் காட்சிகள் மூலம் பதிலளித்திருக்கிறார். மேலும் நாயகி உடனான காதல் காட்சிகளிலும், நண்பனுக்காக உருகும் காட்சிகளிலும் அருள்நிதியின் எதார்த்த நடிப்பு,நம்மை கதையோடு ஒன்றவைகிறது. நாயகி துஷாராவிற்கு பெரிய அளவில் நடிக்க வாய்ப்பு இல்லை என்றாலும் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.
மேலும் அருள்நிதி நண்பராக வரும் சந்தோஷ் பிரதாபின் திரை வாழ்வில் ஒரு முக்கிய படமாக இப்படம் அமைந்திருக்கிறது அவருடைய நடிப்பு மற்றும் கதாபாத்திரம் ஒடுக்கப்பட்ட மக்களின் பிம்பமாக திரையில் தெரிகிறது. மேலும் வில்லனாக ராஜசிம்மன்,அருள்நிதியின் அப்பாவாக யார் கண்ணன், மாமாவாக முனிஷ்காந்த் என அனைவருமே தங்களுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திஇருக்கிறார்கள்.
இயக்கம் மற்றும் இசை
சாதிய பாகுபாட்டை மையமாக வைத்து, அதன் பின்னணியில் நடக்கும் அரசியல் அட்டூழியங்களை வெளிச்சம் போட்டு காட்ட முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் சை கௌதம் ராஜ். அழுத்தமான கதையும் பரபரப்பான திரை கதையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. டி.இமானின் பின்னணி இசை, ஆக்சன் காட்சிகளை மேலும் பல மடங்கு பரபரப்பாக்குகிறது. காதல் காட்சிகளிலும் மென்மையான இசையாய் மனதை வருடுகிறார், மேலும் படத்தின் பாடல்கள் அனைத்துமே ரசிக்கும் விதமாக அமைந்திருக்கிறது.
ஸ்ரீதர் ஒளிப்பதிவு, நாகூரான் ராமச்சந்திரன் படத் தொகுப்பு ஆகியவையும் இயக்குனருக்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக கணேஷ்குமாரின் சண்டை பயிற்சிகளும் சண்டை காட்சிகளும் மிரட்டியிருக்கிறது.
படம் எப்படி ?
சாதியை மையமாகக் கொண்டு பலப்படங்கள் தமிழ் சினிமாவில் வந்திருக்கின்றன, அதுபோல ஒரு படமாக இது இல்லாமல் சாதியால் பிரிந்து கிடக்கும் மக்களின் அறியாமையையும், அந்த அறியாமையை பயன்படுத்தி மக்களை முட்டாளாக்கும் அரசியலையும் அரசியல்வாதிகளையும் தோலுரித்து காட்டும் பல காட்சிகளும்,குறிப்பாக ஷார்ப்பான வசனங்களும் ஒரு நல்ல கிராமத்து கமர்சியல் படத்தை பார்த்த மனநிறைவை தருகிறது. கிராமத்து ஆடியன்ஸை திருப்திப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இப்படம்,சிட்டி ரசிகர்களுக்கு எந்த அளவிற்கு படம் பிடிக்கும் என்பது ஒரு மிகப்பெரிய கேள்விக்குகுறியே?
– நவீன் சரவணன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”