பா. ரஞ்சித் தயாரிப்பில், எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள "ப்ளூ ஸ்டார்" படத்தின் விமர்சனம் .
கதைக்களம் :
அரக்கோணத்தில் ரஞ்சித் (அசோக் செல்வன்) தலைமையிலான ‘ப்ளூ ஸ்டார்’ அணிக்கும், ராஜேஷ் (சாந்தனு பாக்யராஜ்) தலைமையிலான 'ஆல்ஃபா பாய்ஸ்' அணிக்கும் இடையே யார் பலமானவர்கள் என மைதானத்திலும், பொது இடங்களிலும் அடிக்கடி அடித்துக் கொள்கிறார்கள். சில பிரச்சினையின் காரணமாக இரண்டு அணிகளும் எதிரெதிரே விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டு அணிகளுக்கும் இடையில் மோதல் வெடிக்க, நீண்ட நாட்களாக இருந்த தடை தகர்த்தெறியப்பட்டு, கோயில் திருவிழாவில் கிரிக்கெட் நடத்த முடிவு செய்யப்படுகிறது. இந்தப் போட்டியில் யாருக்கு வெற்றி கிடைத்தது என்பதை சொல்வதே மீதி கதை
நடிகர்களின் நடிப்பு:
காதல், ஆக்ரோஷம் கலந்த துடிப்பான இளைஞனாக திரையை ஆக்கிரமிக்கிறார் அசோக் செல்வன்.கதாநாயகனுக்கு இணையான ரோலில் சாந்தனு பாக்யராஜும் சிறப்பாக நடித்துள்ளார். வழக்கமான ஹீரோயின் போல் இல்லாமல் மாறுபட்ட வேடத்தில் அசத்தியுள்ளார் கீர்த்தி பாண்டியன். பிரித்விராஜன் காமெடிகள் நம்மைச் சிரிக்க வைத்து கைதட்டலை பெறுகிறது. மற்ற துணை நடிகர்களும் தங்களுக்கான பங்களிப்பை கொடுத்துள்ளனர்
இயக்கம் மற்றும் இசை:
கிராமத்தில் இருக்கும் இரு அணிகள், அவர்களுக்கிடையே நடக்கும் சண்டை, அதற்குள் நடக்கும் சாதிய வேறுபாடுகள், இளைஞர்களின் கிரிக்கெட், காதல் என தனித்துவமாக திரைக்கதை எழுதி அசத்தியிருக்கிறார் இயக்குனர் எஸ்.ஜெயக்குமார். கோவிந்த் வசந்தாவின் பாடல்கள் ரசிக்கும் ரகம், பின்னணி இசை தெறிக்கும் ரகம்
படம் எப்படி :
முதல் பாதி முழுவதும் காதல், காமெடி, கிரிக்கெட் என பீல் குட் படமாக செல்லும் ப்ளூ ஸ்டார், இரண்டாம் பாதியில் கிரிக்கெட் விளையாட்டால் ஏற்படும் நிகழ்வுகளை சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்கிறார்கள். கிராமத்தில் நிலவும் சாதிய ஒடுக்குமுறையையும் அவை விளையாட்டில் பிரதிபலிப்பதையும் எதார்த்த காட்சிகளில் காட்டிருக்கும் விதம் சிறப்பு. திரைக்கதை எந்த வகையிலும் சொல்ல வந்த விஷயத்தில் இருந்து வெளியே செல்லாமல் இருப்பது படத்திற்கு பெரிய பலம். ஆங்கங்கே வரும் நுணுக்கமான அரசியல் வசனங்களும், காட்சிகளும் சமகால உண்மைகளை பிரதிபலிக்கிறது.
கிரிக்கெட் படத்தின் கிளைமாக்ஸ் என்றாலே கடைசி ஓவர் வரை சென்று வெற்றி பெரும். அக்மார்க் சினிமா டெம்ப்ளேட்டை தவிர்த்திருக்கலாம். மொத்தத்தில் இளைஞர்களிடையே சாதி பாகுபாடு இல்லாமல் ஒற்றுமையாக அவசியம் என்பதை கிரிக்கெட் விளையாட்டை வைத்து சீரியஸாக மெசேஜ் சொல்லி இருக்கும் படமே "ப்ளூ ஸ்டார்"
நவீன் சரவணன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“