திரைத்துறை சார்பில் நடத்தப்படும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் முன்னணி நடிகர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த தி.மு.க தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் தி.மு.க சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழுக் கூட்டத்தில் ‘கலைஞர் நூற்றாண்டு விழா’ பிரம்மாண்டமாக நடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, தமிழ் திரை உலகில் தனது வசனத்தால் மக்களை சிந்திக்க வைத்த வசனகர்த்தா கருணாநிதி நூற்றாண்டு விழாவினை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் அனைத்து திரை உலக சங்கங்களும் இணைந்து வரும் 6.1.2624 சனிக்கிழமையன்று சென்னையில் கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சிறப்பாக நடத்த உள்ளது.
இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திரங்கள், தெலுங்கு பட உலகிலிருந்து சிரஞ்சீவி, வெங்கடேஷ், மலையாள பட உலகிலிருந்து மம்முட்டி, மோகன்லால், கன்னட பட உலகில் சிவராஜ்குமார் மற்றும் இந்தி திரை உலகில் முன்னணி நட்சத்திரங்கள் என அனைத்து மொழி நட்சத்திரங்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்தநிலையில், கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கான அழைப்பிதழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நடிகர் சங்கம் சார்பில் பூச்சி முருகன், இயக்குநர் சங்கம் சார்பில் லிங்குசாமி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் முரளி ராமநாராயணன், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் இன்று வழங்கினர்.
கலைஞர் நூற்றாண்டு விழா 6 மணி நேரம் நடைபெறுகிறது. இந்த விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கருணாநிதி வசனம், பாடல்கள் எழுதிய படங்களில் இருந்து பல புதுமையான காட்சி அமைப்புகள், கலைஞரை பற்றி இதுவரை வெளிவராத தகவல்கள் அடங்கிய ஆவண படங்கள் என பல தரப்பட்ட பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த நிகழ்ச்சிகள் மேடையில் நிகழ்த்தப்பட உள்ளன.
இந்த விழாவிற்காக டெல்லியில் இருந்து ட்ரோன்கள் வரவழைக்கப்பட்டு பிரம்மாண்டமான ஷோக்கள் நடைபெற உள்ளன. இந்த விழாவிற்காக 50க்கும் மேற்பட்ட முன்னனி இயக்குனர்கள், 20க்கும் மேற்பட்ட நடன மாஸ்டர்கள் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த விழாவிற்காக மிகப்பெரிய மேடை, 20,000 பேர் அமர்ந்து பார்க்க நாற்காலிகள், 50க்கும் மேற்பட்ட டிஜிட்டல் திரைகள் என அனைத்து ஏற்பாடுகளையும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மேற்பார்வையில், பெப்சி பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“