கபடி என்றால் என்னவென்றே தெரியாத நாயகன் தன் குடும்பத்திற்காகவும் தாத்தாவிற்காகவும் கபடி கற்றுக்கொண்டு, வில்லன்களை எப்படி வீழ்த்துகிறார் என்பதே பட்டத்து அரசனின் கதை.
அதர்வாவின் மிடுக்கான தோற்றமும், கட்டுமஸ்தான உடல்வாக்கும் கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்துக்கு பக்காவாக பொருந்தியிருக்கிறது. எமோஷனல் காட்சிகளில் உருக்கமும்,சண்டை காட்சிகளில் மிரட்டலும், காதல் காட்சிகளில் எதார்த்தமும் என கமர்சியல் ஹீரோவிற்கான வடிவமைப்பில் கலக்கியிருகிறார் அதர்வா.
கம்பீரமான குடும்ப தலைவனாக நெகிழவும்,கபடி வீரானாக மிரளவும் வைக்கிறது ராஜ்கிரனின் நடிப்பு. பல படங்களில் இதுபோன்ற கதாபாத்திரங்களில் அவர் நடித்திருந்தாலும் மீண்டும் மீண்டும் தன் யதார்த்த நடிப்பின் மூலம் ரசிக்க வைத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் ராதிகாவிற்கு மற்றுமொரு நல்ல ரோல், அதை தன் சிறப்பான நடிப்பின் மூலம் திரையில் அசத்தியிருக்கிறார்.
சிங்கம்புலியின் காமெடிகள் ஓரளவிற்கு ரசிக்கவைக்கிறது. நாயகி ஆஷிக்காவிற்கு கிராமத்து கதாபாத்திரம் ஓரளவிற்கு பொருந்தியிருக்கிறது, அதில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆர்.கே.சுரேஷின் வில்லத்தனமான நடிப்பு கதைக்கு கூடுதல் பலம். ஜிப்ரானின் பின்னணி இசை திரைக்கதையை மற்றொரு தளத்திற்கு எடுத்து செல்கிறது. பாடல்கள் அனைத்தும் அழகான கிராமத்து மண்வாசனை.

கிராமத்தின் இயற்கை அழகை பெரியதிரையில் கண்டுகளிக்க வைக்கிறது லோகநாதனின் ஒளிப்பதிவு. இயக்குனர் சற்குணத்தின் டிரேட் மார்க் ஜார்னரான கிராமத்து கமர்ஷியலிலேயே சற்று கபடி,சண்டை,காமெடி நிறைய எமோஷனல் என குடும்ப ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் இயக்குனர். கதையில் பெரிய அளவில் சுவாரசியங்கள் இல்லை என்றாலும் ஆங்காங்கே வரும் காமெடி,பாடல்கள்,சண்டைகள்,கபடி காட்சிகள் என சலிக்காத வகையில் படம் முடிகிறது.
குடும்ப ரசிகர்களுக்கும், கிராமத்து வாசிகளுக்கும் இப்படம் பிடிக்கும் என்றாலும் இன்றைய தலைமுறை ரசிகர்களை கவருமா என்பது கேள்விக்குறியே?
நவீன் குமார்