அறிமுக இயக்குனர் “பொன்குமார்” இயக்கத்தில்,”கௌதம் கார்த்திக்” நடிப்பில் வெளிவந்த ஆகஸ்ட் 16 “1947” படம் எப்படி இருக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கதைக்களம்:
“ராபர்ட்” என்கிற வெள்ளைக்கார அதிகாரி ஆட்சி செய்யும் “செங்காடு” என்னும் இடத்தில், ராபர்ட்டும், அவனது மகனும் மக்களை அடிமையாக்குவதும், பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதும் என அட்டூழியம் செய்து வருகிறார்கள். இதனிடையே அந்த ஊரில் வசிக்கும் இளைஞனான நாயகன் கௌதம் கார்த்திக் இதனை எதிர்த்து குரல் கொடுக்கிறார். மேலும் இந்தியாவிற்கே சுகந்திரம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில்,இந்தச் செய்தி செங்காடு கிராமத்திற்கு எவ்வாறு வந்தடைந்தது என்பதை சுவாரசியமாக சொல்லி இருக்கும் ஒரு சரித்திர படமே ஆகஸ்ட் 16 “1947”.
நடிகர்களின் நடிப்பு:
இது ஒரு சரித்திர படம் என்பதால் நடிகர்கள் அனைவருமே அக்காலத்திற்கு ஏற்றார் போல நடை, உடை பாவனைகளை மாற்றி, பிரமாதமாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக நாயகன் “கௌதம் கார்த்திக்” நடிப்பில் நம்மை அசர வைக்கிறார். கிளைமாக்ஸ் காட்சிகளில் அவர் பேசும் வசனம், நமக்குள் ஒரு சுதந்திர உணர்வை ஏற்படுத்துகிறது. மேலும் அவருடைய நடிப்பிற்கான,சிறந்த படங்களில் இப்படம் முதன்மையானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
நாயகியாக ரேவதி நடித்திருக்கிறார். இது அவருடைய முதல் படம் என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள், அந்தளவிற்கு படத்தில் அவருடைய நடிப்பும், கதாபாத்திரமும் அழுத்தமாக அமைந்திருக்கிறது. விஜய் டிவி “புகழுக்கு” இது ஒரு லைஃப் டைம் ரோல் என்றே சொல்லலாம், கலக்கி இருக்கிறார். ஆங்கிலேயே அதிகாரி ராபர்டாக (ரிச்சர்ட் அஷ்டன்), அவரது மகன் ஜஸ்டினாக (ஜேசன் ஷா) இருவருமே வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார்கள். மற்றபடி இப்படத்தில் நடித்த அனைத்து துணை நடிகர்களுமே படத்திற்கு தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
இயக்கம் மற்றும் இசை:
இன்றைய தலைமுறையினர் அறிந்திராத கதைக்களத்தை,படமாக எடுத்ததற்கு இயக்குனருக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள். மேலும் சுதந்திரம் அடைவதற்கு, நம் முன்னோர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டடு இருக்கிறார்கள் என்பதை இப்படம் ஆங்காங்கே வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு. சுதந்திரம் கிடைத்த பிறகும் அந்த செய்தி செங்காடு கிராமத்திற்கு எப்படி வந்து சேர்ந்தது? என்பது தான் கதைக்களம் என்றாலும், இதை தவிர்த்து சில இடங்களில் படம் இக்கருத்திலிருந்து வெளியே சென்று வருவது படத்தின் பரபரப்பை சற்று குறைக்கிறது.
மேலும் இது கற்பனை கலந்த கதை என்பதால், சினிமாத்தனமாக சில விஷயங்களை சேர்த்திருக்கிறார்கள். அது பெரிய அளவில் எடுபடவில்லை. படத்தின் இசை படத்துக்கு தேவையான அளவு அமைந்திருக்கிறது பாடல்கள் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கலாம். கலை இயக்குனர் மறைந்த சந்தானத்திற்கு மிகப்பெரிய பாராட்டுக்கள், அந்த காலகட்டத்தையும், அவர்களின் பழக்கவழக்கங்களையும் நம் கண் முன்னே நிறுத்தியிருக்கிறார்கள்.
பாஸிட்டிவ்ஸ்;
*மக்களுக்கு சொல்ல வேண்டிய அருமையான கதை.
*அனைத்து நடிகர்களின் கச்சிதமான நடிப்பு.
*தேசப்பற்று வசனங்கள்.
*ஆங்கிலேயர்கள் செய்த அநீதிகளை காட்சிப்படுத்தி இருக்கும் விதம்.
நெகட்டிவ்ஸ் :
*படம் மெதுவாக செல்கிறது.
*படத்தின் முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யம்,அடுத்த பாதியில் காணாமல் போகிறது.
*படத்தில் எல்லாம் சரியாக அமைந்திருந்தாலும், ஏனோ படத்தை முழுமையாக ரசிக்க இயலவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil