தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் கடந்த சில வருடங்களுக்கு முன்பு புதிய அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்து பின்னர் அந்த முடிவில் இருந்து பின்வாங்கினார். இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்த நிலையில், ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்காதது ஏன் என்பது குறித்து ஏ.வி.எம் பிஆர்.ஓ விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் அண்ணாத்த படத்திற்கு பிறகு தற்போது ஜெயிலர் மற்றும் லால் சலாம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு புதிதாக அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் கட்சி ஆன்மீகத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்கும் என்று கூறியிருந்தார். ஆனால் இந்த அறிவிப்பு வந்த சில மாதங்களில் தான் அரசியல் கட்சி தொடங்கும் திட்டத்தில் இருந்து பின்வாங்குவதாகவும், தனது உடல் நிலை சரியில்லாதே இதற்கு காரணம் என்றும் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பு அரசியல் ஆசையில் இருந்த அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. இது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள ஏ.வி.எம் பிஆர்.ஓ பெரு துளசி பழனிவேல் கூறுகையில்,
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்பதை அறிந்து ரஜினிகாந்த் ரசிகர்கள் யாரும் ஏமார்ந்து போகவில்லை. அப்படி யாரேனும் ஏமாற்றம் அடைந்திருந்தால் அவர் அரசியலுக்காக வந்தவர் என்று தான் அர்த்தம். அவரு ரஜினிக்காக வரவில்லை. புதிய அரசியல் கட்சி தொடங்கினால் நமக்கு போஸ்டிங் கிடைக்கும் என்று மற்ற கட்சியில் இருந்து வந்தவர்கள்தான் ரஜினி அரசியல் கட்சி தொடங்கவில்லை என்று சொன்னதும் வெளியேறினார்கள்.
ஆனால் ரஜினிகாந்த் ரசிகர்கள் யாரும் மன்றத்தில் இருந்து வெளியேறவில்லை. இன்றைக்கும் அவரின் உண்மையான ரசிகர்கள் அவருடன் தான் இருக்கிறார்கள். அதேபோல் சத்யம் தியேட்டரில் பல விஜய், அஜித், விக்ரம் உள்ளிட்ட நடிகர்களின் நிகழ்ச்சிகள் நடந்துள்ளது. ஆனால் ரஜினிகாந்த் நிகழ்ச்சி நடைபெறும்போது கூட்டம் அலைமோதும் டிராபிக் ஆகும். தியேட்டர் மேலே ரசிகர்கள் இருப்பார்கள். அந்த அளவிற்கு தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
இந்த கூட்டம் இப்போதும் அவருக்கு இருக்கிறது. வேறு எந்த நடிகருக்குமு் இப்படி ஒரு கூட்டம் வந்ததில்லை. இன்றைக்கு அஜித் விஜய், அவர்கள் ரசிகர்கள் ஆன்லைனில் பதிவிட்டு ரசிகர்கள் கூட்டத்தை சேர்க்கிறார்கள். ஆனால் ரஜினிகாந்த்க்கு உலக நாடுகள் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜய் அஜித் என பல நடிகர்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் ரஜினிகாந்த் அளவுக்கு யாரும் இல்லை. ரஜினிகாந்தின் முட்டி அளவுக்குதான் இவர்கள் அனைவரும்.
தனியாக அவர்கள் பெரிய உயரத்தில் இருந்தாலும் ரஜினிகாந்துடன் ஒப்பிடும்போது அவர் முட்டி அளவுதான் உயரம். இதற்கு இடையில் ஒரு குருப் விஜய் சூப்பர் ஸ்டார் என்றும், ஒரு குருப் அஜித் சூப்பர் ஸ்டார் என்றும் கூறி வருகிறார்கள். ஆனால் இதனை ரஜினிகாந்த் கண்டுகொள்ளவே இல்லை. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்க்கு பிறகு மக்களோடும் ரசிகர்களோடும் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் மட்டும் தான் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“