இளையராஜாவிடம் இருந்து பிரிந்த இயக்குனர் பாரதிராஜா தனது முதல் படத்தை இயக்கிய நிலையில், இந்த படத்திற்காக வைரமுத்து எழுதிய ஒரு பாடலில் ஒரு வார்த்தையை மாற்ற வேண்டும் என்பதற்காக ஒரு நாள் முழுவதும் காந்திருந்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
Advertisment
தமிழ் சினிமாவில் பல தவிர்க்க முடியாத படைப்புகளை கொடுத்தவர் பாரதிராஜா. இவரது இயக்கத்தில் கடந்த 1987-ம் ஆண்டு வெளியான படம் வேதம் புதிது. சத்யராஜ், அமலா, ராஜா, சரிதா உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்திற்கு கண்ணன் என்பவர் கதை எழுதியிருந்தார். இளையராவிடம் இருந்து பிரிந்த பாரதிராஜா இயக்கிய முதல் படம் இதுதான்.
1986-ம் ஆண்டு மண்ணுக்குள் வைரம் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான தேவேந்திரன் என்பவர் வேதம் புதிது படத்திற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த படத்திற்கு பாரதிராஜா அவரை கமிட் செய்யும்போது, பலரும் உங்களுக்கும் இளையராஜாவுக்கும் தான் செட் ஆகும். இவரால் இந்த படத்தை தூக்கி நிறுத்த முடியாது என்று கூறியுள்ளனர். ஆனாலும் பாரதிராஜா அவரையே ஒப்பந்தம் செய்துள்ளார்.
வேதம் புதிது படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் அடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா என்ற பாடல் இன்றும் இளைஞர்களின் பேவரெட் பாடலாக அமைந்துள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருந்தார். இதில் ‘’மாட்டு வண்டி பாதையிலே கூட்டுவண்டி போகுதம்மா’’ என்ற பாடலில் ஒரு வார்த்தையை மாற்ற பாரதிராஜா விரும்பியுள்ளார்.
பிராமணர் குடும்பத்தை சேர்ந்த அமலா – தேவர் குடும்பத்தை சேர்ந்த ராஜா இருவரும் காதலிக்க, இதை தெரிந்துகொண்ட அமலாவின் அப்பா சாருஹாசன், அமலாவுக்கு வேறு திருமணம் செய்து வைக்க, வண்டியில் கூட்டிச்செல்வார். அப்போது வரும் இந்த பாடலை பாடகர் மலேசியா வாசுதேவன் பாடியிருந்தார். இந்த பாடலை பதிவு செய்ய அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து அனைவரும் ரெடியாக இருந்துள்ளனர். ஆனால் பாடலை படித்த பாரதிராஜாவுக்கு கடைசி வரியில் திருப்தி இல்லாமல் இருந்துள்ளது.
இந்த பாடலின் கடைசி வரியில் பச்சை கிளி இரண்டும் பண்ணி வைத்த பாவம் என்ன என்று எழுதியிருப்பார். ஆனால் இதில் பண்ணி என்று வருவதை மக்கள் பன்றி என்று புரிந்துகொள்வார்கள் என்று யோசித்த பாரதிராஜா அதை மாற்ற வேண்டி வைரமுத்துவை தொடர்கொண்டுள்ளார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட 7 மணி நேரம் காத்திருந்த நிலையில், ஒருநாள் கால்ஷீட் முடித்துள்ளது. அதன்பிறகு வைரமுத்து வந்து பாடல் வரிகளை மாற்றி கொடுத்துள்ளார்.
பச்சை கிளி இரண்டும் பண்ணி வைத்த பாவம் என்ன என்ற வரியை மாற்றிவிட்டு, சின்ன கிளி இரண்டும் செய்து வைத்த பாவம் என்ன என்று எழுதியுள்ளார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் இன்றும் வரவேற்பை பெற்று வரும் ஒரு பாடலாக நிலைத்திருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“