தமிழ் சினிமாவில் சிறந்த போலீஸ் படங்களை வரிசைப்படுத்தினால் அதில் முன்னணியில் இருப்பது தங்கப்பதக்கம் படம் தான். எஸ்.சௌத்ரி கேரக்டரில் சிவாஜி கணேசன் வாழ்ந்த இந்த படம், நடிகரும் அரசியல் விமர்சகருமான ‘’சோ’’ அரைமணி நேரம் தாமதமாக வந்ததால் உருவான கதை என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
1974-ம் ஆண்டு இயக்குனர் பி.மாதவன் இயக்கத்தில் வெளியான படம் தங்கப்பதக்கம். சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா, ஸ்ரீகாந்த், மேஜர் சுந்தர்ராஜன், சோ, மனோரமா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்திற்கு, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, கவியரசர் கண்ணதாசன் அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
பொதுவாக தான் நடிக்கும் படங்களில் அந்த கேரக்டராகவே மாறிவிடும் தன்மை கொண்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இந்த படத்தில் நீதியை காப்பாற்ற தவறு செய்த தனது மகனையே சுட்டுக்கொன்றுவிடுவார். இந்த படத்திற்கு கதை எழுதியவர் இயக்குனர் மகேந்திரன். ரஜினியின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய முள்ளும் மலரும் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மகேந்திரன் அதற்கு முன்பு கதாசிரியராக இருந்தார்.
இயக்குனர் நடிகர், பத்திரிக்கையாளர், அரசியல் விமர்சகர் என பல திறமைகளை கொண்ட சோ, துக்ளக் என்ற பத்திரிகையை நடத்திக்கொண்டிருந்தார். இந்த பத்திரிக்கையில் வேலை பார்த்துக்கெனாண்டிருந்த மகேந்திரன், தினமும் காலை 7 மணிக்கு அலுவலகத்திற்கு வந்து அன்றைய செய்தித்தாள்கள் மற்றும் அனைத்து வேலைகளையும் பார்த்துவிட்டு இரவு 9 மணிக்கு தான் வீட்டுக்கு திரும்புவாராம்.
அப்படி ஒருநாள் மகேந்திரன் 7 மணிக்கு வந்து செய்தித்தாள்களை படித்துக்கொண்டிருந்தபோது, அதில் ஒரு ஆங்கிலப்படத்தின் விளம்பரம் வந்துள்ளது. போலீசான கதாநாயகன் ஒற்றை கண்ணுடன் குதிரையின் மீது அமர்ந்து காவல் காக்கும் ஒரு போஸ்டர். இந்த போஸ்டரை பார்த்த மகேந்திரனுக்கு மனதில் பல எண்ணங்கள் தோன்றியுள்ளது. குற்றவாளிகளை விரட்டி பிடித்ததனால் தான் இவருக்கு ஒரு கண் போயிருக்க வேண்டும். இதேபோல் தமிழில் ஒரு கதை பண்ண வேண்டும் என்று யோசித்துள்ளார்.
அன்றைய தினம் ‘’சோ’’ அரைமணி நேரம் தாமதமாக வர, அதற்கு முன்பே அவரது அலுவலகத்திற்கு வந்த நடிகர் செந்தாமரை மற்றும் அவரது நண்பர் கண்ணன்., தங்களுக்காக ஒரு கதை எழுதி தரும்படி கேட்டுள்ளனர். இதை கேட்ட, மகேந்திரன் ஒரு ஒன்லைன் சொல்கிறேன் என்று சொல்லி, ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி, அவரது மகன் பெரிய குற்றவாளி. இவர்களுக்கு இடையில் நடக்கும் பாசப்போராட்டம் நீதியை காப்பது தான் கதை என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட அவர்கள் இருவரும் சிறப்பாக இருக்கிறது என்று சொல்ல, அதற்குள் சோ வந்துவிடுகிறார். அவரை பார்க்க சென்ற, செந்தாமரை மற்றும் கண்ணன் இருவரும் மீண்டும் மகேந்திரனிடம் வந்து கதை ரெடியா என்று கேட்க, இப்போது எப்படி எழுத முடியும் என்று அவர் கேட்டுள்ளார். அதன்பிறகு அவருக்கு தனியாக ஒரு அறை எடுத்து கொடுத்து இரவு 9 மணிக்கு மேல் கதையை எழுதி கொடுக்குமாறு கூறியுள்ளனர். அப்படி எழுதிய கதைதான் தங்கப்பதக்கம்.
முதலில் இரண்டில் ஒன்று என்ற டை்டடிலுடன் இதை நாடகமாக நடத்த செந்தமாரை நாயகனாக நடித்துள்ளார். கண்ணன் இயக்கியுள்ளார். இந்த நாடகத்தை பார்க்க வந்த சிவாஜி கணேசன், மிகவும் பிடித்துபோய், சிவாஜி நாடக சபா மூலம் நடத்தியுள்ளார். 100 நாட்கள் வெற்றிகராமாக சென்ற இந்த நாடகம் பின்னாளில் சிவாஜி நடிப்பில் தங்கப்பதக்கம் என்ற பெயரில் படமாக வெளியானது. சோ அரைமணி நேரம் தாமதமாக வந்ததால், இத்தனை ஆண்டுகள் கடந்தும் போற்றப்படும் ஒரு கதையை கொடுத்துள்ளார் இயக்குனர் மகேந்திரன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.