தமிழ் சினிமாவில் பழமையான தயாரிப்பு நிறுவனம் என்று அழைக்கப்படும் ஏ.வி.எம். நிறுவனம் சார்பில், 1966-ம் ஆண்டு வெளியான படம் அன்பே வா. எம்.ஜி.ஆர், சரோஜா தேவி, நாகேஷ், டி.ஆர்.ராமச்சந்திரன், மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தை ஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்கியிருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் வாலி எழுதியிருந்தார்.
ஏ.வி.எம் நிறுவனம் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்த முதல் படம், கலர் படம் என்ற அறிவிப்பு வெளியான உடனே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்துள்ளது. அதேபோல் எம்.ஜி.ஆர் தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி முழுக்க முழுகக் ஒரு காதல் படத்தில் நடித்தது இது தான் முதல் முறை. அதனால் இந்த படத்தின் அனைத்து பாடல்களும் வரவேற்பை பெற வேண்டும் என்று ஏ.வி.எம் நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து வெளியீட்டுக்கு தயாரானபோது, சென்சார் செய்வதற்கு முன்பாக, எம்.ஜி.ஆருக்காக தனியாக திரையிடப்பட்டுள்ளது. படத்தை பார்த்துவிட்டு வெளியில் வந்த எம்.ஜி.ஆர், படம் நல்லாருக்கு, ஆனா இது எனக்கான படம் இல்லை. எம்.எஸ்.விஸ்வநாதனுக்காக எடுக்கப்பட்ட படம் மியூசிக் அருமையாக இருக்கிறது என்று கூறியுள்ளார். அதன்பிறகு படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
படத்தை பார்த்த சென்சார் அதிகரிகள் படத்தின் முதல் பாடலான புதிய வானம் புதிய பூமி என்ற பாடலை கேட்டுவிட்டு, கவிஞர் வாலியை அழைத்துள்ளனர். இந்த பாடலில் உதயசூரியனை காட்டும்போது, உதய சூரியனின் பார்வையிலே என்று வாலி எழுதியிருந்தார். அப்போது திராவிட முன்னேற்ற கழகம் தீவிரமாக இயங்கி வந்ததால், சென்சார் அதிகரிகள் அரசியல் தொடர்பான கருத்துக்கள் படத்தில் இடம்பெற கூடாது என்று கடுமையாக எச்சரித்தனர்.
அந்த வகையில் உதயசூரியன் இங்கு எதற்காக என்று கேட்க, காலையில் சூரிய உதயம் அதனால் இந்த வரிகளை அமைத்திருக்கிறோம் என்று சொல்ல, அப்போ இந்த காட்சியை படமாக்கிவிட்டு தான் பாடல்களை எழுதினீர்களா என்று கேட்க, வாலி இல்லை என்று கூறியுள்ளார். அதன்பிறகு இந்த வார்த்தையை மாற்றுங்கள் என்று சொல்ல, அந்த இடத்திலேயே உதயசூரியன் என்பதை புதிய சூரியன் என்று மாற்றியுள்ளார் கவிஞர் வாலி. அதற்கு சென்சார் அதிகாரிகள் அனுமதி கொடுக்க, வார்த்தையை மாற்றிவிட்டதால், இந்த சூரிய உதயம் தொடர்பான காட்சிகளுக்கு அனுமதி கொடுத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“