தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்து முத்திரை பதித்த விஜயகந்த் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இருக்கும்போது, தன்னை பார்க்க வந்த இயக்குனர் ஒருவருக்கான தனது பேட்டியையே பாதியில் நிறுத்தியுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
மதுரையில் பெரும் பணக்கரரான விஜயகாந்த், சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து பலகட்ட முயற்சிக்கு பின் ஹீரோவாக மாறினார். முதல் பட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டாலும் அடுத்தடுத்து வாய்ப்பு இல்லாமல் இருந்த அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியவர் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். அவரது இயக்கத்தில் வெளியான சட்டம் ஒரு இருட்டறை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
அதனைத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த விஜயகாந்த், பல புதுமுக இயக்குனர்கள் தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் கொடுத்து அவர்களை வெற்றிப்பட தயாரிப்பாளர்களாக மாற்றியுள்ளார். தான தர்மம் செய்வதில் முன்னணியில் இருந்த விஜயகாந்த், தன் சம்பளத்தில் ஒரு பங்கை மக்களுக்காக செலவிடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். அதேபோல் சினிமாவில் தன்னை வைத்து படம் இயக்கிய இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள், என அனைவரையும் எப்போதும் மதிக்கும் குணத்தடன் இருந்தவர்.
சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்த விஜயகாந்த் அரசியலிலும் என்ட்ரி ஆனார். கடந்த 2011- சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 29 இடங்களில் வெற்றி பெற்ற விஜயகாந்த் எதிர்கட்சி தலைவராக உயர்ந்தார். அப்போது அவர் தனது கட்சி அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அவருக்கு வாழ்த்து சொல்வதற்காக இயக்குனர் விக்ரமன் அங்கு வந்துள்ளார். அவரை பார்த்த விஜயகாந்த் ஆதரவாளர்கள் அவரை உள்ளே அழைத்து சென்றுள்ளனர்.
பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துக்கொண்டிருந்த விஜயகாந்த் விக்ரமனை பார்த்தவுடன் வாங்க சார் என்று பேட்டியை பாதியில் நிறுத்திவிட்டு அவரை வரவேற்றுள்ளார். அதன்பிறகு தனது உதவியாளரை அழைத்து இவரை என் அறையில் உட்கார வை என்று கூறி மாடிக்கு அனுப்பியுள்ளார். இந்த தருணம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் என்று இயக்குனர் விக்ரமன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“