தமிழ் சினிமாவில் கேப்டன் என்ற பட்டத்துடன் வலம் வந்த விஜயகாந்த், பழம்பெரும் நடிகர் டி.ஆர்.மகாலிங்கம் போல் நானும் தெருவுக்கு வந்துவிட கூடாது என்று சொல்லி படத்தின் டைட்டிலை மாற்றுமாறு கூறியுள்ளார்.
சினிமா பின்புலம் இல்லை என்றாலும், தனது தொடர் முயற்சிகளின் மூலம் பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்தவர் விஜயகாந்த். தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்திருந்த இவர், எம்.ஜி.ஆர் பாணியில்,சினிமாவில் அனைவருக்கும் சமமான உணவு என்ற வழக்கத்தை கொண்டு வந்தவர்.
அதேபோல் அறிமுக இயக்குனர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்த தமிழ் சினிமா நடிகர் என்ற அடையாளம் பெற்றிருக்கும் விஜயகாந்த், நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு, கால்ஷீட் கொடுத்து அவர்களை முன்னேற்றத்திற்கு கொண்டு வரும் வேலைகளையும் செய்துள்ளார். இன்றைய நடிகர்களில் தமிழ் தவிர வேற்று மொழி படங்களில் நடிக்காத ஒரே நடிகர் விஜயகாந்த் தான். தற்போது அவர் இல்லை என்றாலும், அவரை பற்றி சினிமா பிரபலங்கள் பல தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்,
அந்த வகையில், சமீபத்தில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு விஜயகாந்த் பற்றி ஒரு சம்பவத்தை கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர், விநியோகஸ்தர் என பன்முக திறமை கொண்டவர் கலைப்புலி தாணு. இவரது இயக்கத்தில் கடந்த 1990-ம் ஆண்டு வெளியான படம் புதுப்பாடகன். கதை திரைக்கதை இயக்கம், தயாரிப்பு என அனைத்து பணிகளையும் செய்த கலைப்புலி தாணு, படத்திற்கு இசையும் அமைத்துள்ளார்.
படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு முதலில் தெருப்பாடகன் என்று பெயர் வைத்துள்ளார். இந்த பெயருடன் முதலில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், ஒரு இசை மேதையிடம் இருந்து விஜயகாந்த் மற்றும் அவரது நண்பர் ராவுத்தருக்கு அழைப்பு வந்துள்ளது. இந்த இசை மேதை, தெருப்பாடகன் என்று பெயர் வைத்து டி.ஆர்.மகாலிங்கம் நடித்த ஒரு படத்தால் அவர் தெருவுக்கு வந்துவிட்டார்.
இப்போது தெருப்பாடகன் டைட்டிலை நீங்கள் வைத்திருக்கிறீர்கள். பாடல் ஹிட்டாகிவிட்டது தாணுவிடம் சொல்லி படத்தின் டைட்டிலை மாற்றுங்கள் என்று கூறியுள்ளார். இதை கேட்ட விஜயகாந்த், ராவுத்தர் இருவரும் கலைப்புலி தாணு அலுவலகத்திற்கு வந்து, டி.ஆர்.மகாலிங்கம் குறித்து சொன்ன தகவலை சொல்லி படத்தின் டைட்டிலை மாற்றுமாறு கூறியுள்ளனர். இதை கேட்ட தாணு, எனக்கு ஒன்னும் பிரச்னை இல்லை. கட்டாயப்படுத்தி இந்த டைட்டிலை நான் வைக்கவில்லை.
உங்களுக்கு பிடித்த வேறு டைட்டில் இருந்தால் சொல்லுங்க அதையே வைத்துவிடலாம் என்று சொல்ல, உடனடியாக ராவுத்தர் புதுப்பாடகன் என்ற டைட்டிலை கூறியுள்ளார். அதை ஏற்றுக்கொண்ட தாணு அதே பெயரில் படத்தை வெளியிட்டுள்ளார். படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.