தமிழ் சினிமாவில் முன்னணி இசையைமப்பாளராக இருந்த எம்.எஸ்.விஸ்வநாதன் கவியரசர் கண்ணதாசனுடன் நெருக்கமான நட்புடன் இருந்தார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று. அதேபோல் அவர் நடிகர் சந்திரபாபுவுடன் நெருக்கமான நட்புடன் இருந்தார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில், இயக்குனர் நடிகர், தயாரிப்பாளர், பாடகர், என பன்முக திறமை கொண்டவர் சந்திரபாபு. 1947-ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும், அதற்கு முன்பு பாடுவதற்காக வாய்ப்பு கேட்டு பல கம்பெனிகளில் ஏறி இறங்கியுள்ள சந்திரபாபு, ஒருமுறை இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிடம் பாடுவதற்கு வாய்ப்பு கேட்டு சென்றுள்ளார்.
தன்னிடம் பாட்டு பாட வாய்ப்பு கேட்கும் அனைவரையும் தன்னிடம் உதவியாளராக இருக்கும் எம்.எஸ்.விஸவநாதனிடம் அனுப்பி குரலை பரிசோதிக்க சொல்வார் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. அதன்படி சந்திரபாபுவையும் அவரிடம் அனுப்பி, எப்படி பாடுகிறார் என்பதை பார்க்குமாறு கூறியுள்ளார். அப்போது ஒரு டியூன் போட்ட எம்.எஸ்.வி அதற்கு பாடல் பாடுமாறு சந்திரபாபுவிடம் கூறியுள்ளார்.
இதை கேட்ட சந்திரபாபு, தனக்கு தெரிந்த அத்தனை சினிமா பாடல்களையும் பாடியுள்ளார். சில மணி நேரங்களுக்கு பிறகு அங்கு வந்த எஸ்.எம்.சுப்பையா நாயுடு பையன் எப்படி பாடுகிறான் என்று கேட்க, இவர் எங்கு பாடுகிறார்? பாடல்களை வசனமாக சொல்கிறார். அதுவும் தமிழில் இல்லை என்று கூறியுள்ளார். இதை கேட்ட எஸ்.எம்.சுப்பையா நாயுடு நீ வீட்டுக்கு போய் 2 வாரம் பயிற்சி எடுத்துவிட்டு திரும்பவும் வந்து பாடு என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு ஜெனோவா படத்தின் மூலம் எம்.எஸ்.வி இசையமைப்பாளராக மாறிவிட்ட நிலையில், சந்திரபாபுவும் காமெடி நடிகராக உயர்ந்துவிட்டார். தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த சந்திரபாபு, டி.ஆர்.ராமண்ணா இயக்கிய குலேபகாவல்லி என்ற படத்தில் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்து வந்தார். அப்போது அவர் உச்சத்தில் இருந்ததால், படத்தில் அவருக்கு ஒரு பாடல் கொடுக்கலாம் என்று யோசித்த ராமண்ணா, இசையமைப்பாளர் எம்.எஸ்.வியிடம் சந்திரபாபுவுக்கு ஒரு டியூன் ரெடி பண்ண கூறியுள்ளார்.
எம்.எஸ்.வியும் டியூன் ரெடி செய்து அதை சந்திரபாபுவிடம் வாசித்து காட்ட, டியூனை கேட்ட சந்திரபாபு, என்ன டியூன் இது, இதற்கு நான் பாடி ஆடனுமா என்று கேட்க, அனைவரும் அதிர்ச்சியாகியுள்ளனர். ஆனாலும், பழைய சம்பவத்தை மனதில் வைத்து தான் சந்திரபாபு இப்படி பேசுகிறார் என்பதை புரிந்துகொண்ட எம.எஸ்.வி, தனது உதவியாளர்களிடம நீங்கள் டியூனை வாசியுங்கள் என்று சொல்லிவிட்டு, வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு நடனமாடியுள்ளார்.
இதை பார்த்த சந்திரபாபு, ஓடி வந்து எம்.எஸ்.வியை கட்டிப்பிடித்து பாராட்யதோடு மட்டுமல்லாமல் நீ கலைஞன் டா என்று மனதார பாராட்டியுள்ளார். அன்று தொடங்கிய இவர்கள் நட்பு சந்திரபாபுவின் இறுதி நாள் வரை தொடர்ந்துள்ளது. கடைசி காலத்தில் சந்திபாபு எம்.எஸ்.வி வீட்டில் தான் இறந்தார் என்றும் தகவல்கள் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“