எம்.ஜி.ஆர் நடிப்பில் ஒரு படத்தை இயக்க தயாரான நடிகர் சந்திரபாபு, இந்த படத்திற்கான நாயகி சாவித்ரியை மாற்றுமாறு எம்.ஜி.ஆர் கூறியும் கேட்டகாததால் அந்த படம் பாதியில் கைவிடப்பட்டது என்பது பலரும் அறியாத ஒரு தகவல்
தமிழ் சினிமாவில் பழம்பெரும நடிகராக இருந்தவர் டி.ஆர்.மகாலிங்கம். பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவரிடம் உதவியாளராக இருந்தவர் தான் சந்திரபாபு. பாடல் பாடுவதில் ஆர்வம் கொண்ட இவர், தனது குடும்பம் வறுமையில் இருந்தபோது, தான் பாடல் பாடி கிடைத்த ரூ200 பணத்தில், ஆங்கில பாடல்களை கேட்கும் ஆர்வத்தின் காரணமாக, புதிய கிராமபோன் வாங்கி வந்துள்ளார்.
இரவு முழுவதும் பாடல் பாடிவிட்டு, காலை 6 மணிக்கு தூங்கி மதியம் 12 மணிக்கு விழிப்பது தான் சந்திரபாபுவின் வழக்கமாக இருந்துள்ளது. இதனிடையே 1947-ம் ஆண்டு வெளியான தனா அமராவதி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சந்திரபாபுவுக்கு, டி.ஆர்.மகாலிங்கம் தான் தயாரித்த மோகன சுந்தரம் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்.
இந்த படம் 1951-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து, அடுத்து மூன்று பிள்ளைகள் என்ற படத்தில் நடித்தார். இதனையடுத்து எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான பல முக்கிய படங்களில் சந்திரபாபு காமெடி வேடத்தில் நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர் நடிப்பில் மாடி வீட்டு ஏழை என்ற படத்தை தயாரித்து இயக்க முடிவு செய்த சந்திரபாபு, எம்.ஜி.ஆரிடம் கதையை கூறியுள்ளார்.
படத்தின் கதையை கேட்ட எம்.ஜி.ஆர், ரொம்ப அருமையாக வித்தியாசமாக இருக்கிறது. இந்த கதையை யாரிடமும் சொல்லிவிடாதே நானே நடிக்கிறேன் என்று கூறிவிட்டு தனது சம்பளமாக 4 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார். அதற்கு ஓ.கே சொன்ன, சந்திரபாபு, தனது பிடித்தமான ஹீரோயினாக இருந்த சாவித்ரியை படத்தின் நாயகியாக தேர்வு செய்கிறார். சாவித்ரியை டார்லிங் என்று அழைக்கும் சந்திரபாபு, டார்லிங் படம் ஓ.கே. எம்.ஜி.ஆர் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டார் என்று கூறியுள்ளார்.
படத்தின் சம்பளத்திற்கான அட்வான்ஸ் தொகையை அவரது அண்ணனிடம் கொடுத்துவிடும்படி கூறியிருக்கிறார் என்று சொல்ல, பணம் இருக்கிறதா பாபு என்று சாவித்ரி கேட்டுள்ளார். என்னிடம் ஏது பணம் என்று சந்திரபாபு சொல்ல, நான் தருகிறேன். இப்போது எவ்வளவு வேண்டும் என்று கேட்க, ஒரு 2 லட்சம் இருந்தால் போதும் என்று சந்திரபாபு சொல்ல, அடுத்த நாள் காலை அந்த பணத்தை சாவித்ரி கொடுத்துள்ளார். அதை பெற்றுக்கொண்ட சந்திரபாபு, எம்.ஜி.ஆர். இசையமைப்பாளர் எம்.ஸ்.வி, கேமராமேன் உள்ளிட்ட பலருக்கும் அட்வான்ஸ் கொடுத்துள்ளார்.
அதன்பிறகு படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், ஒரு பாடல் காட்சியை படமாக்கி போட்டு பார்த்துள்ளனர். அதில் சாவித்ரி கொஞ்சம் குண்டாக இருந்ததை பார்த்த எம்.ஜி.ஆர், பாபு சாவித்ரி இந்த படத்திற்கு செட் ஆக மாட்டாங்க, மாற்றிவிடுங்கள். இதுவரை எடுத்த ஷூட்டிங்கிற்கு ஆன செலவை நான் கொடுத்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் சந்திரபாபு, சாவித்ரி இல்லை என்றால் எனக்கு படமே வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இது பற்றி எம்.ஜி.ஆர் எவ்வளவோ சொல்லியும் சந்திரபாபு தனது முடிவில் உறுதியாக இருந்ததால், மாடிவீட்டு ஏழை திரைப்படம் பாதியில் கைவிடப்பட்டது என்று சந்திரபாபுவின் சகோதரர் ஜவகர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“