/indian-express-tamil/media/media_files/TC3JWaoXmVy0LzfB7hMY.jpg)
சந்திரமுகி 2
2005 ஆம் ஆண்டு வெளிவந்த சந்திரமுகி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று என்பது நாம் அறிந்ததே அப்படத்தின் இயக்குனர் பி.வாசு 18 வருடங்களுக்குப் பிறகு சந்திரமுகி 2 என்ற பெயரில் ஒரு படத்தை எடுத்திருக்கிறார் அது சந்திரமுகி 1 ஏற்படுத்திய தாக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தியதா ?
கதைக்களம்
காட்டன் மில் ஓனரான இருக்கும் ரங்கநாயகியின் (ராதிகா) குடும்பத்தில் தொடர்ந்து பல்வேறு அசம்பாவிதங்கள் நடக்கின்றது. அவர்களுக்கு சொந்தமான காட்டன் மில்லில் தீ விபத்து நிகழ்கிறது. ஒரு விபத்தில் ராதிகாவின் இளைய மகளான (லட்சுமி மேனன்) விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் போகிறது. அவரது மூத்த மகள் வேறு மதத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால் குடும்பத்திலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார்.
குலதெய்வ கோவிலை சுத்தம் செய்து பூஜை செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என குடும்ப சாமியார் (ராவ் ரமேஷ்) சொல்வதைக் கேட்டு மொத்த குடும்பமும் வேட்டையபுர அரண்மனையில் தங்கி பூஜைக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.பிரிந்து போன மகள் குழந்தைகளின் Guardian ஆக வருகிறார் பாண்டியன் (ராகவா லாரன்ஸ்).அதன் பிறகு அந்த வீட்டில் அடுத்தடுத்து நடக்கும் அமானுசியங்களை கடந்து எப்படி தப்பித்தார்கள் ? என்பதே மீதி கதை.
நடிகர்களின் நடிப்பு
பாண்டியன் மற்றும் வேட்டையனாக இரு வேறு நடிப்பில் சிறந்ததோர் பர்ஃபார்மன்ஸ் கொடுத்திருக்கிறார் லாரன்ஸ். நடனம், காமெடி, சண்டை, காதல் என கமர்சியல் ஆடியன்ஸை குறி வைத்து நடித்திருக்கிறார். வடிவேலுவின் காமெடிகள் ஆங்காங்கே நம்மை சிரிக்க வைத்தாலும் பழைய வடிவேலுவை நாம் மிஸ் செய்கிறோம் என்பதை உணர்த்திக் கொண்டே இருக்கிறது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு லட்சுமிமேனனுக்கு ஒரு நல்ல ரோல். சந்திரமுகியாக வரும் கங்கனாவின் நடிப்பு மிரட்டல்.குறிப்பாக சண்டைக் காட்சிகளிலும், நடன காட்சிகளிலும் ரசிகர்களை தனது இயல்பான நடிப்பால் கட்டிப் போடுகிறார். மேலும் ராதிகா, மகிமா நம்பியார், ஸ்ருஷ்டி, மகேந்திரன் ஆகியோரும் படத்திற்கு தேவையானதை கொடுத்திருக்கிறார்கள்.
இயக்கம் மற்றும் இசை
தமிழ் சினிமாவில் வரலாற்று வெற்றி பெற்ற திரைப்படங்களின் இரண்டாம் பாகத்தை எடுப்பது எளிதான காரியம் அல்ல. இப்படி ஒரு ரிஸ்கை சந்திரமுகி 2 படத்தின் மூலம் இயக்குனர் பி வாசு எடுத்திருக்கிறார். முதல் பாகத்தில் வித்யாசாகரின் இசை எந்த அளவிற்கு படத்திற்கு முக்கியமாக அமைந்ததோ அதை விட ஒரு படி மேலே இப்படத்திற்கு கீரவானியின் இசையும், பாடல்களும் அமைந்திருக்கிறது.
படம் எப்படி
பஸ்சை பிளந்து கொண்டு வண்டியில் இரண்டு குழந்தைகளை காப்பாற்றும் லாரன்ஸின் அறிமுக காட்சியே, "என்னடா பண்ணி வெச்சியிருக்கிங்க?" என்று தான் சொல்ல தோன்றுகிறது. கதையில்தான் எந்த வித்தியாசமும் இல்லை என்றாலும் கூட திரைக்கதையிலாவது ஏதாவது சுவாரசியத்தை கொண்டு வந்திருக்கலாம். அதையும் பட குழு செய்யத் தவறியது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம். படம் முழுவதும் ஒரு சில காட்சிகளைத் தவிர மற்ற அனைத்து காட்சிகளுமே சந்திரமுகி 1 பாகத்தில் நாம் பார்த்ததை அப்படியே வேறு நடிகர்களை வைத்து எடுத்திருக்கிறார்களோ என்ற எண்ணம் எழுவதை மறுக்க முடியாது.
முதல் பாதியில் வடிவேலு - லாரன்ஸ் இடையேயான காட்சிகள் சற்று ரசிகர்களை ஆசுவாசப்படுத்தினாலும் இடைவேளை ட்விஸ்ட் மிரட்டல்.இரண்டாம் பாதியில் வரும் ஃப்ளாஷ்பேக் காட்சிகளை ஓரளவிற்கு ரசிக்கலாம். கதையில் அடுத்து என்ன நடக்கும் என்பதை நாம் எளிதாக யூகிக்க முடிவதால் சுவாரசியமில்லாத ஒரு சாதாரண கமர்ஷியல் படமாக "சந்திரமுகி 2" முடிகிறது.ஆனால் சந்திரமுகி 1 படத்தை திரையரங்கில் பார்க்காத 2k கிட்ஸ்க்கு ஒரு நல்ல அனுபவத்தை இப்படம் கொடுக்கலாம்.
மொத்தத்தில், சந்திரமுகி 1 மக்களிடையே ஏற்படுத்திய தாகத்தையும், மேஜிக்யையும் இப்படம் கொடுக்கவில்லை என்பதே உண்மை.
- நவீன் சரவணன்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.