தங்க மீன்கள் படத்தில், தனது சிறப்பான நடிப்பின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்த சுட்டி சிறுமி, சாதனா வெங்கடேஷ் இப்போது மிகப்பெரிய க்ளாசிக்கல் டான்ஸராக இருக்கிறார் என்பது அவரது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் தெரிகிறது.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வரும் ராம், இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான படம் தங்கமீன்கள். 2007-ம் ஆண்டு வெளியான கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ராம், 6 வருட இடைவெளிக்கு பிறகு இயக்கிய படம் தான் தங்க மீன்கள். இந்த படத்தில் அவரே கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார். தந்தை – மகள் இடையிலான பாசத்தை அடிப்படையாக கொண்டது இந்த படம்.
பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியான இந்த படம் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக ராம் மற்றும் குழந்தையாக நடித்த சிறுமி சாதனாவின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது., படத்தின் அனைத்து பாடல்களையும் மறைந்த கவிஞர் நா.முத்துகுமார் எழுதியிருந்தார். அனைத்துமே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பாடல்களாக இருக்கிறது.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது அல்ல என்ற வசனமும், ஆனந்த யாழை மீட்டுகிறாள் என்ற பாடலும் பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தந்தைகளுக்கு மிகவும் ஃபேவரெட் பாடல்களாக இன்றும் ஒளித்துக்கொண்டு இருக்கிறது. அதேபோல் குழந்தை சாதனாவின் நடிப்பும், படம் பார்த்த ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்துள்ளது என்று சொல்லலாம்.
இந்த படத்திற்கு பிறகு, ராம் இயக்கிய பேரன்பு என்ற படத்தில் மம்முட்டியின் மகளாக நடித்திருந்த சாதனா அதன்பிறகு திரைப்படங்களில் நடிக்கவில்லை. சமூகவலதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சாதனா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். பெரும்பாலும் இவர் வெளியிட்டுள்ள பதிவுகள் அனைத்துமே டான்ஸ் தொடர்பான பதிவுகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது.