தனுஷ் நடிப்பில் வெளியான வேங்கை, அஜித் நடித்த வீரம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த வெற்றி பழனிச்சாமியின் தந்தையும் முன்னாள் எம்.எல்.ஏவுமான என்.எஸ்.பழனிச்சாமிக்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.
கடந்த 2007-ம் ஆண்டு நடிகர் நந்தா நடிப்பில் வெளியான அகரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் வெற்றி பழனிச்சாமி. தொடர்ந்து, மாசிலாமணி, வேங்கை, காஞ்சனா, வீரம், விஸ்வாசம், அண்ணாத்த, உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த இவர், தற்போது சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் கங்குவா படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தமிழ் மட்டும்லலாமல், தெலுங்கு இந்தி உள்ளிட்ட மொழிகளில் சில படங்கள் ஒளிப்பதிவு செய்துள்ள வெற்றி பழனிச்சாமி, தற்போது தனது தந்தையும் முன்னாள் எம்.எல்.ஏவுமான என்.எஸ்.பழனிச்சாமிக்கு மணிமண்டபம் கட்டியுள்ளார். 1991-ம் ஆண்டு கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட என்.எஸ்.பழனிச்சாமி, கல்லூரி பேராசிரியராக இருந்த நிலையில், அந்த வேலையை விட்டு விட்டு விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார்.
விவசாயிகளின் நலனுக்காக பாடுபட்ட என்.எஸ்.பழனிச்சாமி, தமிழகத்தின் அரசியல் சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார். திருப்பூர், பல்லடம், அவினாசி உள்ளிட்ட பகுதிகளில், உழவர் காவலன் என்று அழைக்கப்பட்ட என்.எஸ்.பழனிச்சாமி, கடந்த 2016-ம் ஆண்டு சிறுநீரக கோளாறு காரணமாக மரணமடைந்த நிலையில், அவரின் 82-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் 18-ந் தேதி, கோவை பல்லடம் அருகே வே.நாதகவுண்டன்பாளையம் பகுதியில் மணிமண்டபம் திறக்கப்பட உள்ளது.
முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இந்த மணிமண்டபத்தை திறந்து வைக்க உள்ளார். முழுக்க முழுக்க விவசாயிகள் ஒன்றிணைந்து நிதி திரட்டி கட்டப்பட்டுள்ள இந்த மணிமண்டபம், தற்போது கவனம் ஈர்த்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“