தமிழ் சினிமாவில் தனது பாடல்கள் மூலம் சாதித்த கண்ணதாசன் தான் சோற்றுக்கே வழி இல்லாமல் இருந்தபோது மெரினாவில் தான் சந்தித்த வலியை படத்திற்கு காட்சியாக வைத்து அந்த காட்சிக்கு பாடலையும் எழுதியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனது பாடல் வரிகள் மூலம் இன்றும் மக்கள் மத்தியில் நிலைத்திருக்கும் கவிஞர் தான் கவியரசர் கண்ணதாசன். க்ளாசிக் சினிமாவில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள இவர், சோகம், மகிழ்ச்சி, என மனிதனின் அத்தனை உணர்வுகளுக்கும் தனது வரிகளால் உயிர் கொடுத்துள்ளார். அதேபோல் தான் எழுதும் பாடல்களுக்கு தனது சொந்த வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களை பயன்படுத்திக்கொள்வது கண்ணதாசனின் வழக்கம்.
அந்த வகையில் தான் வறுமையில் இருந்த காலக்கட்டத்தில் தான் சந்தித்த வலியை உணர்த்துவதற்காக ஒரு பாடலை எழுதி அதில் தன்னை போலவே ஒரு நடிகரையும் நடிக்க வைத்துள்ளார் கண்ணதாசன். தமிழ் சினிமாவில் பாடல் ஆசிரியராக சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னை வந்த கண்ணதாசனுக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் ஒரு வேளை சோற்றுக்கே வழி இல்லாமல் அலைந்துகொண்டிருந்தார்.
அந்த காலக்கட்டத்தில் ஒருநாள் இரவு பசியுடன் மெரினா கடற்கரையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த கண்ணதாசனை ஒரு போலீஸ் அதிகாரி வந்து எழுப்பியுள்ளார். இங்கு படுக்க கூடாது என்று சொல்ல, அய்யா நான் வேலை தேடி சென்னை வந்தேன். ஆனால் எனக்கு இங்கு யாரையும் தெரியாது. அதனால் இங்கு படுத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். இதை கேட்ட போலீஸ், யாரையும் தெரியாம எதுக்கு இங்க வந்தே? இங்கு படுக்க கூடாது. அப்படி படுக்க வேண்டும் என்றால் எனக்கு 25 பைசா கொடு என்று கேட்டுள்ளார்.
இதை கேட்ட கண்ணதாசன் தனக்கே உரிய கவிதை நடையில் என்னை வெட்டி போட்டாலும் என்னிட்டம் ஒரு பைசா இல்லை என்று சொல்ல, அப்படியென்றால் இங்கே படுக்காதே என்று அந்த போலீஸ் அவமானப்படுத்தி விரட்டி அடிக்கிறார். அப்போது கண்ணதாசன் மெரினாவில் இருக்கும் காந்தி சிலை வரை நள்ளிரவில் நடந்தே வந்துள்ளார். அதன்பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைத்து பாடல் ஆசிரியராக மாறிய கண்ணதாசன், தான் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் திரைப்படம் தயாரிக்க முடிவு செய்கிறார்.
இந்த படத்தில் தான் சந்தித்த வலியை காட்சியாக மாற்ற நினைத்து கண்ணதாசன், அதற்காக ஒரு பாடலை எழுதி முடிக்கிறார். அந்த பாடலை மெரினா கடற்கரையில் மாலையில் படமாக்க வேண்டும். ஆனால் அனுமதி நள்ளிரவில் கொடுக்கப்படுகிறது. நள்ளிரவு என்றால் மெரினாவில் கூட்டம் இருக்காதே என்று யோசித்த கண்ணதாசன், தன்னிடம் வேலை பார்த்த அனைவரையும் மெரினாவிற்கு அழைத்து சென்று பார்வையாளர்கள் போல் அமர வைக்கிறார்.
தன்னிடம் இருந்த 20 கார்கரையும் மெரினா கடற்கரையை பார்க்க வந்த மக்கள் பயன்படுத்துவது போல் செய்துவிட்டு ஷூட்டிங்கை தொடங்கியுள்ளார். அப்போது படமாக்கப்பட்ட இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்றும் ஒரு தத்துவ பாடலாக மக்கள் மத்தியில் நிலைத்திருக்கிறது. இந்த பாடல் தான் ஜெமினி கணேசன் நடிப்பில் வெளியான சுமைதாங்கி படத்தில் இடம் பெற்ற ‘’மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’’ என்ற பாடல். இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.