எவ்வளவு பணம் கொடுத்தாலும் பிணமாக நடிக்க மாட்டேன். என் மீது மாலைபோட்டு, பக்கத்தில் அமர்ந்து அழுவது வேண்டாம். வேறு யாருக்காவது மாலை போட்டு படுக்க வையுங்கள் என்று மறைந்த நடிகர் டெல்லி கணேஷ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில், காமெடி, வில்லன், குணச்சித்திரம் உள்ளிட்ட பல கேரக்டர்களில் நடித்து முத்திரை பதித்தவர் பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ். நெல்லையில் பிறந்த இவர், ராணுவத்தில் வேலையை உதறிவிட்டு நடிக்க வந்து, நாடகங்களில் நடித்து திறமையை வளர்த்துக்கொண்டுள்ளார். 1964-1974 வரை 10வருடங்கள் இந்திய ராணுவத்தில் பணியாற்றிய டெல்லி கணேஷ் அதன்பிறகு நடிப்பில் கவனம் செலுத்தியுள்ளார்.
நாடகங்களில் நடித்து வந்த டெல்லி கணேஷ், கே.பாலச்சந்தர் இயக்கிய பட்டின பிரவேசம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். 400-க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், பல கேரக்டரில் நடித்து முத்திரை பதித்திருந்தாலும், இறந்துபோவது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். தன்னை படுக்க வைத்து மாலை போட்டு அழுவது தனக்கு ஒத்துவராது என்று என்று கூறியுள்ளார்.
இது குறித்து டெல்லி கணேஷ் ஒரு பேட்டியில், எவ்வளவு பணம் கொடுத்தாலும், இறந்து போவது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிடுவேன். யாரையோ வைத்து மாலை போடுங்கள். என்னை படுக்க வைத்து மாலை போட்டு பக்கத்தில் அமர்ந்து அழுவது ஒத்துவராது. நீங்க கொடுக்கிற காசுக்கு அதெல்லாம் பண்ண முடியாது. இறப்பு பற்றி யாருக்கும் பயம் இல்லை. ஆனால் இந்த தேதியில் இறந்துவிடுவேன் என்று தெரிந்தால், பயப்படாதவர்களே இருக்கமாட்டார்கள்.
இறப்பு என்பது திடீரென வருவது. மரணம் என்பது நிரந்தரம். அது தெரியாதவரைக்கும் நம்ம ராஜா. என்று டெல்லி கணேஷ் கூறியுள்ளார். 80 வயதான டெல்லி கணேஷ் பட்டின பிரவேசம் படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், அதன்பிறகு இயக்குனரும் நடிகருமான விசு இயக்கிய அனைத்து படங்களிலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். குறிப்பாக சிதம்பர ரகசியம் படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்த டெல்லி கணேஷ், பெண்மணி அவள் கண்மணி என்ற படத்தில், திருட்டுப்பழி சுமந்து தூக்கத்தில் இறந்துவிடும் கேரக்டரில் நடித்திருப்பார். அதேபோல் நேற்று தூக்கத்திலேயே டெல்லி கணேஷ் மரணமடைந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “