சினிமா, அரசியல் என இரண்டிலும் தனக்கென தனி முத்திரையை பதித்துள்ள எம்.ஜி.ஆர் குறித்து இன்றளவும் பலரும் அறியாத பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் எம்.ஜி.ஆர் குறித்து சிவாஜி பேசிய அரியவகை வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பெற்றிருப்பவர் எம்.ஜி.ஆர். 1917-ம் ஆண்டு இலங்கையில் பிறந்த இவர், 1936-ம் ஆண்டு வெளியான சதிலீலாவதி படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் கேரக்டர் நடிகராக உயர்ந்த எம்.ஜிஆர்.தமிழ் சினிமாவின் தவிர்க் முடியாத நாயகான வளர்ந்தார்.
நடிப்பு மட்டுமல்லாமல் இயக்கம் தயாரிப்பு என பன்முக திறமைகளை வளர்த்துக்கொண்ட எம்.ஜி.ஆர் அரசியலில் கால்பதித்தார் தொடக்கத்தில் திமுகவில் இருந்த அவர், கருத்து வேறுபாடு காரணமாக அதில் இருந்து பிரிந்து தனியாக அதிமுகவை தொடங்கினார். அதிமுக தொடங்கியது முதல் தொடர்ந்து 3 முறை முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் மக்கள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தார்.
இன்றைய காலட்டத்தில் எம்.ஜி.ஆர் இல்லை என்றாலும், அவருக்காக அதிமுகவிற்கு ஓட்டு போடும் தொண்டர்களும், அவர் படங்களை டிவியில் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் கூட்டமும் இன்னும் இருக்கதான் செய்கிறது. அதேபோல் எம்.ஜி.ஆரின் புகழ் காலத்தால் அழியாதது என்பதற்கு பல சான்றுகள் உள்ளது. இன்றைய அரசியல்வாதிகள் திரைத்துறையினர் கூட தங்களது மேடை பேச்சுகளில் எம்.ஜி.ஆர். பற்றி பேசாமல் இருந்ததில்லை என்று சொல்லலாம்.
Advertisment
Advertisements
வாழ்ந்த வரை அனைவரின் பாராட்டுக்களை பெற்று தனக்கென தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்த எம்.ஜி.ஆர் கடந்த 1987-ம் ஆண்டு மரணமடைந்தார். அவரது இழப்பு தமிழகத்தில் அன்றைய காலகட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர் மறைவின்போது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேசிய வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
என் அருமை அண்ணன் புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அவருக்கு எத்தனை பட்டங்கள் கொடுத்தாலும் தகும். அப்படிப்பட்ட அருமை புரட்சித்தலைவர் அவர்களும் நானும், சிறுவயது முதலே ஒன்றாக வாழ்ந்தவர்கள். ஒன்றாக உண்டவர்கள். அவரில்லாமல் நான் சாப்பிட மாட்டேன். நான் இல்லாமல் அவர் சாப்பிட மாட்டார்.
காலத்தின் கோலம் அரசியல் என்ற அரக்கன், எங்களை இருட்டறையில் தள்ளினாலும், நாங்கள் எங்கிருந்தாலும் சகோதரர்களாக வாழ்ந்தவர்கள். உலகிலேயே கலையுலகத்தை சேர்ந்த ஒரு மாபெரும் நடிகர் தனக்கென அரசியல் கட்சி தொடங்கி சிறந்த அரசியல்வாதியாக திகழ்ந்து இப்படி ஒரு மாபெரும் கூட்டத்தை தன்பக்கம் இழுத்தவர்.
வாழக்கை அமைந்தால் எம்.ஜி.ஆரைப்போல் அமைய வேண்டும். இனி ஒவ்வொரு குழந்தையும் எம்.ஜி.ஆரை போல்தான் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட ஆலவிருஷத்தை நம்பி கோடான கோடி மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட தன்னலம் கருதாத அந்த பொன்மனச்செம்மல் நம்மை விட்டு பிரிந்தது சொல்ல முடியாத நட்டம் என்று பேசியுள்ளார்.
தமிழ் திரையுலகில் இரு துருவங்களாக இருந்த எம்.ஜி.ஆர். சிவாஜி இருவரும் தனித்தனியாக பல படங்களில் நடித்திருந்தாலும் அவர்கள் இருவரும் ஒன்றாக நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil