தன்னை படத்தில் இருந்து நீக்கிய தயாரிப்பாளரை பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே ஒரு படத்தை தயாரித்து அந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான நடிகை பானுமதி தனது நோக்கத்தையும் தீர்த்துக்கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்திய சினிமாவில் நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், எடிட்டர் என பன்முக திறமை கொண்ட நடிகை என்று பெயரேடுத்த பானுமதி, தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். 1939-ம் ஆண்டு வெளியான வரா விக்ரயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான பானுமதி அதே ஆண்டு வெளியான சந்தன தேவன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து ராஜமுக்தி, அபூர்வசகோதரர்கள், லைலா மஜ்னு, நல்லதம்பி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பானுமதி, எம்.ஜி.ஆருடன் அலிபாபாவும் 40 திருடர்களும், மதுரை வீரன், ராஜா தேசிங்கு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 1954-ல் வெளியான சக்ரபாணி, 1975-ல் சிவக்குமார் பானுமதி நடிப்பில் வெளியான இப்படியும் ஒரு பெண் ஆகிய இரு படங்களுக்கு இசையமைத்துள்ளார். பாடகியாகவும் பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.
1955-ம் ஆண்டு எல்.வி பிரசாத் இயக்கத்தில் வெளியான பெரிய வெற்றிப்படம் மிஸ்ஸியம்மா. ஜெமினிகணேசன், சாவித்ரி இணைந்து நடித்த இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. நாகி ரெட்டி அல்லூரி சக்கரபாணி ஆகியோர் இந்த படத்தை இணைந்து தயாரித்திருந்தனர். இந்த படத்தில் சாவித்ரி நடித்திருந்த மேரி கேரக்டருக்கு முதலில் நடிக்க தேர்வானவர் நடிகை பானுமதி தான்.
தயாரிப்பாளர் நாகி ரெட்டி எப்போதும் படப்பிடிப்பு தளத்திற்கு வரமாட்டார் என்றாலும், அல்லூரி சக்கரபாணி படப்பிடிப்பு தளத்திற்கு வந்து படப்பிடிப்பு பற்றி கேட்டுக்கொள்வார். அப்படி வரும்போது பானுமதி பேசிய வசனங்கள் சக்ரபாணிக்கு அவ்வளவு திருப்திகரமாக இல்லை. இதை பானுமதியிடம் சொல்ல போக, இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் தொடர்ந்துகொண்டே இருந்தது. இதனால் ஒரு கட்டத்தில் பானுமதியை படத்தில் இருந்து நீக்கிவிட்டார் சக்ரபாணி.
இதனால் கோபமான பானுமதி உடனடியாக தெலுங்கில் ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார். அந்த படத்தின் கதாநாயகன் ஒரு கஞ்சன். அந்த கேரக்டருக்கு சக்ரபாணி என்று பெயர் வைத்த பானுமதி படத்திற்கும் அதே பெயரை சூட்டியுள்ளார். மேலும் இந்த படத்தின் மூலம் பானுமதி இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். மிஸ்ஸியம்மா படம் வெளியாவதற்கு முன்பே சக்ரபாணி படம் வெளியாகிவிட்டது. பானுமதியின் கணவர் ராமகிருஷ்ண ராவ் தான் இந்த படத்தை இயக்கியிருந்தார்.
அதே சமயம் மிஸ்ஸியம்மா படம் வெளியாகி வெற்றி பெற்றதை பார்த்த பானுமதி இந்த படத்தில் நடிக்கவில்லை என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது. ஆனாலும் நான் நடிக்கவில்லை என்பதால் தான் சாவித்ரி என்ற ஒரு சிறப்பான நடிகைக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சி தான் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“