/indian-express-tamil/media/media_files/2025/07/22/kr-vijaya-family-2025-07-22-11-15-20.jpg)
பழம்பெரும் நடிகைளில் முக்கியமானவர் கே.ஆர்.விஜயா. ஜெமினி கணேசன் ஜோடியாக கற்பகம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், தொடர்ந்து, எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் என முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். மேலும் பல பக்தி படங்களிலும் நடித்துள்ள கே.ஆர்.விஜயா, திரைத்துறையில் நடிகையாக மட்டுமல்லாமல், தனது குடும்பத்திற்கு மூத்த ஆண் பிள்ளையாக இருந்து எங்களை படிக்க வைத்தார் என்று அவரது தங்கை கே.ஆர்.வத்சலா கூறியுள்ளார்.
இது குறித்து இந்தியா க்ளிக்ஸ் தமிழ் யூடியூப் சேனலுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியில், எங்கள் குடும்பத்தில் என் அக்காதான் மூத்த பெண் குழந்தை. அவர் ஒரு ஆண்மகனைப் போல இந்தக் கலைத்துறையில் பிரபலமடைந்து, எங்களையெல்லாம் படிக்க வைத்தார். நாங்கள் இந்தத் துறையில் வராததால் தான், படிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் படிக்க வேண்டிய காலத்தில், எங்களால் படிக்க முடியவில்லை.
என் அக்கா அந்தக் கலைத்துறைக்கு வந்த ஆரம்பத்தில், அவர் மிகவும் கஷ்டப்பட்டார். ஏனென்றால், அந்தக் காலத்தில் இக்கலைக்கு வருவது மிகவும் கடினம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அந்தக் காலகட்டத்தில், நாங்கள் அந்தக் கஷ்டங்களைப் படக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில், அக்காதான் அந்தக் சுமையைத் தன் தோளில் ஏற்றுக் கொண்டார். அதனால்தான், எங்களால் படிக்க முடிந்தது. மூத்த குழந்தைகளுக்கே உண்டான ஒரு குடும்பப் பொறுப்பு உண்டு.
எங்கள் அப்பாவின் பூர்வீகம் ஆந்திராவில் உள்ள குண்டூர். அவர்களின் குடும்பத் தொழில் பொற்கொல்லர். ஆனால், அவருக்கும் பொற்கொல்லர் தொழிலுக்கும் சம்பந்தமே இல்லை. அவர் ஒரு காலத்தில் மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்தவர். பிறகு ராணுவத்தில் சேர்ந்தார். அங்கிருந்து எங்கள் மாமாவுடன் எங்கள் வீட்டுக்கு வந்தபோது, என் அம்மாவின் அழகைப் பார்த்து மயங்கி, காதல் திருமணம் செய்து கொண்டார். அந்தக் காலத்தில் ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்வது ஒரு பெரிய புரட்சி.
வீட்டார் எல்லோரையும் எதிர்த்து, அவர்கள் காதலுக்கு மரியாதை கொடுத்து, திருமணம் செய்து கொண்டார்கள். அதனால்தான் வாழ்க்கையில் பல போராட்டங்கள். என் அம்மா ஒரு இல்லத்தரசிதான். அவர் பல போராட்டங்களைச் சந்தித்தார். ஏனென்றால், என் அப்பா ஒரு பொறுப்பான தந்தையாக இல்லாததால், என் அம்மாவுக்குப் பல பிரச்சனைகளும், கஷ்டங்களும் வந்தன. அதையெல்லாம் சமாளித்து, எங்களை நல்லபடியாக வளர்த்து, இந்த அளவுக்கு ஆக்கியிருக்கிறார்
என் அப்பாவும், அம்மாவும் முருக பக்தர்களாக இருந்ததால், முதல் பெண் குழந்தை பிறந்ததும், தெய்வநாயகி என்று பெயர் வைத்தார்கள். சினிமாவுக்கு வந்த பிறகு, ஒருநாள் நடிகர் எம்.ஆர்.ராதா, பேசும்போது, "உன் பேர் என்னம்மா என்று கேட்க தெய்வநாயகி என்று அக்கா கூறியுள்ளார். இவ்வளவு நன்றாக நடிக்கிறாய். இன்னும் பழைய பெயர் வைத்திருக்கிறாயே. இப்போ லேட்டஸ்ட்டாக, மாடர்னாக வைத்துக்கொள்ள வேண்டியதுதான்" என்று சொன்னார். அவர் வைத்த பெயர் தான் விஜயா. அந்தப் பெயரை வைத்த முஹூர்த்தம் நல்ல நேரமாக இருந்ததால், என் அக்கா அந்த அளவுக்குப் பிரபலமானார்.
ஒரு நடனக் கலைஞராகத் தான் துறைக்குள் நுழைந்தார்கள். ஒரு இடத்தில் அவர், எங்கள் சின்ன அக்கா வீட்டுக்காரர், மிஸ்டர் சிவம் என்பவர், அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமான "அவைலபிள் லைட்" புகைப்படக் கலைஞர். அவர் அக்காவின் புகைப்படத்தை எடுத்தார். முழுதும் எண்ணெய் பூசிக் கொண்டு, இப்படி நின்று இருப்பார்கள். அந்தப் புகைப்படத்தை ஒரு சந்தர்ப்பத்தில் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் என்ற இயக்குனர் பார்த்தார். அந்தப் புகைப்படத்தைப் பார்த்துதான் அக்காவைத் தேர்ந்தெடுத்தார்கள். அப்படி அக்கா அவருடைய சினிமா வாழ்க்கையை கதாநாயகியாகத் தொடங்கினார்.
பக்தி படம் நடிக்கும் காலத்தில், அக்கா அசைவம் சாப்பிட மாட்டார்கள். பூஜை செய்வார்கள். அதற்கான நிறைய அர்ப்பணிப்புடன் சாமி வேஷம் செய்தால், அது மிகவும் கடினம் என்று கே.ஆர்.வத்சலா கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.