தமிழ் திரையுலகில் நடிப்பு அரக்கன் என்று பெயரேடுத்தவர் நடிகர் சிவாஜி கணேசன். 1952-ம் ஆண்டு வெளியான பராசக்தி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான சிவாஜி முதல் படத்திலேயே கைதேர்ந்த நடிகராக முத்திரை பதித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர். நடிப்பில் மட்டுமல்லாமல் தனது ஸ்டைலிலும் வித்தியாசத்தை காட்டிய சிவாஜி இப்படியெல்லாம் கூட ஒரு மனிதன் நடிக்க முடியுமாக என்ற கேள்வியை பலருக்கும் எழும்ப காரணமாக இருந்தவர்.
மேலும் வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், கப்பலோட்டிய தமிழன் உள்ளிட்ட வரலாற்றின் உண்மையாக வீரன்களை கண்முன் நிறுத்திய சிவாஜி, பாகபிரிவினை, திருவிளையாடல், கர்ணன் உள்ளிட்ட படங்களில் நடித்து இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த நட்த்திரம். நாடகங்களில் நடித்த தனது அனுபவத்தை சினிமாவில் சரியாக பயன்படுத்திய முக்கிய நடிகர்களில் ஒருவரான சிவாஜியின் நடிப்பை பார்த்து அப்போதைய பாலிவுட் சினிமாவே பயந்தது என்றும் கூட சொல்வார்கள்.
அப்படி ஒரு சம்பவம் கடந்த 1958-ம் ஆண்டு நடந்தது. சிவாஜி நடிப்பில் அந்த ஆண்டு வெளியான படம் உத்தமபுத்திரன். சிவாஜி அம்மான்ஜி அரசனாவும், வீரமிகு போராளியாகவும் நடித்த இந்த படம், க்ளாசிக் சினிமாவில் பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாகும். இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய விரும்பிய அப்படத்தின் தயாரிப்பாளர் அப்போதைய பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த அசோக் குமாரை அனுகி கதையை கூறியுள்ளார்.
அப்போது சிவாஜியின் உத்தமபுத்திரன் படத்தை பார்த்த அசோக் குமார், சிவாஜியின் நடிப்பை பார்த்து உறைந்துபோய், சிவாஜி நடிப்பு நன்றாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போதுதான் பார்க்கிறேன். அவர் சிறப்பாக நடித்த இந்த படத்தில் நான் நடித்தால் நன்றாக இருக்காது என்று கூறி படத்தில் இருந்து விலகியுள்ளார். அதன்பிறகு 1961-ம் ஆண்டு பீம்சிங் இயக்கத்தில் வெளியான க்ளாசிக் படம் பாசமலர்.
சிவாஜி சாவித்ரி இடையேயான அண்ணன் தங்கை உறவை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் இன்றும் தமிழ் சினிமாவில் ஒரு மறக்க முடியாத படமாக உள்ளது. இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய விரும்பிய இந்த படத்தின் தயாரிப்பாளர் அதேபோல் மீண்டும் நடிகர் அசோக் குமாரை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர், சிவாஜி நடித்த பாசமலர் படத்தை நான் பார்க்க மாட்டேன். என் மீது நம்பிக்கை இருந்தால் இந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுங்கள் இல்லை என்றால் வேண்டாம் என்று கூறியுள்ளார்.
அசோக் குமாரின் கண்டிஷனுக்க சம்மதம் தெரிவித்த படக்குழு படப்பிடிப்பை தொடங்கியது. பாசமலர் படத்தை பார்க்காமல் அசோக் குமார் நடித்த இந்த இந்தி பாசமலர் திரைப்படம் அங்கேயும் பெரிய வெற்றியை பெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“