தமிழ் சினிமா உலகில் ஆச்சி என்று அழைக்கப்படும் மனோரமா சினிமா உலகில் 1500 படங்களுக்கு மேல் நடித்து யாரும் எட்டாத உச்சத்தை எட்டியவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். க்ளாசிக் சினிமாவில் அறிமுகமாகி இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் வரை பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள மனோரமாக அனைவருடனும் எளிமையாக பழகும் மனம் கொண்டனர்.
சினிமாவில் உச்சம் தொட்டிருந்தாலும், தனது வாழ்க்கையில் மனோரமாக பல துன்பங்களை சந்தித்துள்ளார். தான் பெண்ணாக பிறந்துவிட்டேன் என்பதால், தனது அப்பாவால் அம்மாவுடன் வெளியேற்றப்பட்ட மனோரமாக தஞ்சைக்கு அருகில் குடியேறி படித்து வந்துள்ளார். இதில் ஒருநாள் அவரின் தாயாருக்கு உடல்நலை சரியில்லாமல் போகவே இனி அம்மாவுக்கு பாரமாக இருக்க வேண்டாம் என்று நினைத்து ஒரு பெரிய வீட்டில் குழந்தையை பாதுகாக்கும் வேலைக்கு சென்றுள்ளார்.
அந்த சமயத்தில் இவருக்கு நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு நடிக்க தொடங்கினார். முதல் நாடகத்தில் பாடிக்கொண்டே நடித்த இவரின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றதால், அடுத்தடுத்து இவருக்கு நாடக வாய்ப்பு குவிய தொடங்கியது. அப்படி ஒரு கட்டத்தில் நடிகர் முத்துராமன் உள்ளிட்ட மனோரமாகவுக்கு தெரிந்தவர்கள் இருக்கும் நாடக குழுவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த நாடகத்தில் நடிப்பதற்காக அவர்களுடன் ரயிலில் புறப்பட்ட மனோரமாவுக்கு அடுத்த நாள் நடிக்கும்போது 100 பக்கம் வசனம் பேச வேண்டும் என்று தெரியவந்துள்ளது. ஆனாலும் தயங்காத மனோரமா ரயிலிலேயே 100 பக்க வசனத்தையும் மனப்பாடம் செய்துகொண்டு அந்த நாடகத்திற்கு தேவையான பாடலையும் மனப்பாடம் செய்துகொண்டார். அந்த நாடகத்தில் அவரது நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
தொடர்ந்து நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்த மனோரமாவை எஸ்.எம்.ராமநாதன் என்ற அந்த நாடக குழுவின் முதலாளி காதலித்துள்ளார். அவரை நம்பிய மனோரமாவும் அவரை காதலித்த நிலையில், தனது அம்மா மீது அளவுகடந்த அன்பு வைத்திருந்தாலும் காதல் என்ற நினைப்பில் தனது அம்மாவிடம் கூட சொல்லாமல் மனோரமா ராமநாதனை திருமணம் செய்துகொண்டார். இதனால் அவரது அம்மாவுக்கு வருத்தம் இருந்தாலும் அதை தனது மகளிடம் காட்டிக்கொள்ளவில்லை.
திருமணத்திற்கு பிறகும் நடித்துக்கொண்டிருந்த மனோரமா இடையில் கர்ப்பமானதை தொடர்ந்து 9-வது மாதம் பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். பிரசவத்திற்காக சென்ற மனோரமாவை பார்க்க அவரது கணவர் வரவே இல்லை. சரி குழந்தை பிறந்தால் பார்க்க வருவார் என்று நினைத்துக்கொண்டிருந்த மனோரமாவின் நினைப்பு பலித்தது. குழந்தை பிறந்து 15 நாட்கள் கழித்து கணவர் எஸ்.எம்.ராமநாதன் மனோரமாவை பார்க்க வந்தார்.
ஆனால் அவர் குழந்தையோ அல்லது மனைவியையோ பார்க்க வரவில்லை. மனோரமாவை மீண்டும் நாடகத்தில் நடிக்க அழைத்து செல்வதற்காக வந்துள்ளார். ஆனால் குழந்தை பிறந்து 15 நாட்கள் தான் ஆகிறது அதற்குள் எப்படி வர முடியும் என்று மனோரமா கேட்க, அதெல்லாம் எனக்கு தெரியாது நீ வந்து தான் ஆக வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். ஆனாலும் வர மாட்டேன் என்று சொல்லாத மனோரமா என் நிலைமையை யோசித்து பாருங்கள் என்று கூறியுள்ளார்.
இதனால் கோபமான ராமநாதன் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். அதன்பிறகு அவர் வரவே இல்லை. கணவர் கோபத்தில் தான் போயிருக்கிறார் திரும்பி வந்துவிடுவார் என்று நினைத்துக்கொண்டிருந்த மனோரமாவுக்கு பல நாட்கள் கழித்து ஒரு கடிதம் வந்தது. அதில் மனோரமாவை விவாகரத்து செய்வதாக எழுதி இருந்துள்ளது. இதை பார்த்து மனோரமான அதிர்ச்சியாகிவிட்டார்.
தான் அந்த நாடக குழுவில் இருந்து வெளியேறிவிட கூடாது என்பதால் தான் தன்னை காதலித்து திருமணம் செயதுகொண்டதை அறிந்த மனோரமான அதன்பிறகு யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் தனது இறுதிக்காலம் வரை மகனுக்காகவே வாழ்ந்துள்ளார் என்று நடிகரும் பத்திரிக்கையாளருமான சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“