தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாக காமெடி நடிகராக வலம் வந்த என்.எஸ்.கிருஷ்ணன், சினிமாவுக்கு வருவதற்கு முன்பாகவே ஏ.வி.எம்.நிறுவனம் பிரபலமாக முக்கிய காரணமாக இருந்தவர் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
க்ளாசிக் சினிமாவில் சிறந்த காமெடி நடிகர் பாடகர் என்று தனக்கென தனி அடையாளத்தை பெற்றவர் என்.எஸ்.கிருஷ்ணன். 1908-ம் ஆண்டு நவம்பர் 29-ந் தேதி நாகர்கோவிலில் பிறந்த இவர், 1935-ம் ஆண்டு வெளியான மேனகா என்ற படத்தின் மூலம் திரைத்துறையிவல் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரின் அறிமுக திரைப்படமான சதிலீலாவதி படத்தில் நடித்திருந்தார்.
தனது நகைச்சுவை மூலம் சமூகத்திற்கு தேவையாக கருத்துக்களை வைத்து அசத்தியவர். கலைவாணர் என்ற பட்டத்துடன் வலம் வந்த என்.எஸ்.கிருஷ்ணன், நகைச்சுவை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்தாமல் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர். அதேபோல் சக நடிகர் நடிகைகளுடன் அன்பாகவும், நட்புடனும் பழகும் வழக்கத்தை வைத்திருந்த என்.எஸ்.கிருஷ்ணன், ஆரம்பத்தில் நாடகத்தின் மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக நாடக கொட்டகைகளுக்கு சோடா விற்க சென்றுள்ளார்.
அப்போது நாடகத்தில் நடிப்பது பாடல் பாடுவது என அனைத்தையும் பார்த்துவிட்டு, தனியாக வந்து பாடி நடித்து பார்க்கும் வழக்கத்தை வைத்திருந்த இவர், சில ஆண்டுகள் கழித்து, மதுரையில் டி.கே.சண்முகம் குருப் நாடக சபா தொடங்கும்போது அதில் ஒரு நடிகராக என்.எஸ்.கே இணைந்துகொள்கிறார். அங்கு பாடல்கள் பாடுவது நடிப்பது என்று பலருக்கும் அறிமுகமான ஒருவராக வலம் வருகிறார்.
அந்த காலக்கட்டத்தில் ஏ.வி.எம்.நிறுவனர், ஏ.வி.மெய்யப்ப செட்டியார், இசைத்தட்டுக்களை தயார் செய்து விற்கும் பணியை செய்து வருகிறார். அப்போது என்.எஸ்.கே பாடுவதை தெரிந்துகொண்ட மெய்யப்ப செட்டியார் அவரை வைத்து ஒரு இசைத்தட்டு உருவாக்க வேண்டும் என்று முயற்சிக்கிறார். இதற்காக அவர் கோவலன் நாடகத்தை என்.எஸ்.கே வைத்து பாடல்களாக உருவாக்கி வெளியிட முடிவு செய்து அதற்கான முயற்சியில் இறங்குகிறார்.
அதன்படி மெய்யப்ப செட்டியாரின் முயற்சிக்கு ஒப்புக்கொண்ட, என்.எஸ்.கே, 3 மணி நேரம் கொண்ட கோவலன் நாடகத்தை 3 நிமிடங்களில் மிகவும் தெளிவான ஒரு பாடலாக பாடி அனைவரையும் வியக்க வைத்துள்ளார். இந்த சாதனையை பார்த்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார் அவரை பாராட்டியுள்ளார். ஏ.வி.எம். இசைத்தட்டு விற்பனையில் என்.எஸ்.கே பாடிய இந்த பாட்டு விற்பனையில் புதிய சாதனையாக இன்றுவரை இருக்கிறது.
அந்த காலக்கட்டத்தில் நாடகத்திலும், இதுபோன்ற இசைத்தட்டுகளிலும் என்.எஸ்.கிருஷ்ணன் என்ற பெயர் பிரபலமாகியுள்ளது. அதன்பிறகு என்.எஸ்.கே திரைப்படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். ஏ.வி.மெய்யப்ப செட்டியார் அதன்பிறகு ஏ.வி.எம்.என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல வெற்றிப்படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒஎச்.சினிமா என்ற யூடியூப் சேனலில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“