கன்னடத்தில் வெளியாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற ஒரு பாடலை தமிழுக்கு ஏற்றபடி டியூன் அமைத்து அந்த பாடலை கண்ணதாசன் எழுதியுள்ளார். அப்போது உதவி இசையமைப்பாளராக இருந்த இளையராஜா கண்ணதாசன் நடந்துகொண்ட விதம் குறித்து பேசியுள்ளார்.
1973-ம் ஆண்டு தேவராஜ் மோகன் இயக்கத்தில் வெளியான படம் பொண்ணுக்கு தங்க மனசு. சிவக்குமார், ஜெயசித்ரா, விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு ஜி.கே.வெங்கடேஷ் இசையமைக்க, கண்ணதாசன், பூவை செங்குட்டுவன் முத்துலிங்கம் உள்ளிட்டோர் பாடல்களை எழுதியுள்ளனர். இந்த படத்தில் இசைஞானி இளையராஜா உதவி இசையமைப்பாளராக பணியாற்றி இருந்தார்.
பொண்ணுக்கு தங்க மனசு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படத்தில் வரும் ‘’தேன் சிந்துதே வானம்’’ பாடல் இன்றைய சினிமா ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலுக்கான டியூன் கன்னடத்தில் ராஜ்குமார் படத்திற்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்த டியூனுக்காக கன்னட பாடலை எழுத அந்த கவிஞர் கிட்டத்தட்ட 7 நாட்கள் டைம் எடுத்துக்கொண்டு எழுதி முடித்துள்ளார்.
அத்தனை நாட்கள் டைம் எடுத்துக்கொண்டாலும், அந்த பாடலை அவர் சரியாக எழுதவில்லை. அதே டியூனை பொண்ணுக்கு தங்க மனசு படத்தில் பயன்படுத்த ஜி.கே.வெங்கடேஷ் திட்டமிட்டுள்ளார். மொட்டை மாடியில் வாடகைக்கு தங்கியிருக்கும் நாயகனுக்கும், அந்த வீட்டு உரிமையாளர் பெண்ணுக்கும் காதல். ஒருநாள் மழை வரும்போது காயவைத்த துணியை எடுக்க நாயகனும் நாயகியும் வரும்போது ரொமான்ஸ் உருவாகி இருவரும் கட்டிப்பிடித்து விடுகின்றனர்.
அப்போது வரும் பாடலுக்காக இந்த டியூன் போடப்பட்டுள்ளது. இந்த டியூனுக்காக கண்ணதாசன் பாடல் எழுத அழைக்கப்பட்டுள்ளார். காட்சியின் சூழ்நிலையை கேட்ட கண்ணதாசன், புகைபிடித்துக்கொண்டே மிகவும் அலச்சியமாக, சாம்பல் கொட்டும் ட்ரேவில் (ஆஷ் ட்ரே) துப்பிக்கொண்டு இருந்துள்ளார். அதன்பிறகு என்ன டியூன் போட்டுருக்கீங்க என்று கேட்க, ஜி.கே.வெங்கடேஷ், தனது உதவியாளரான இளையராஜாவிடம் சொல்லி டியூனை வாசிக்குமாறு கூறியுள்ளார்.
அதன்படி டியூனை இளையராஜா வாசிக்க, டியூனை கேட்ட கண்ணதாசன், ‘’தேன் சிந்துதே வானம்’’ என்று பல்லவியை கூறியுள்ளார். இதை கேட்ட இளையராஜா இந்த வார்த்தை டியூனுடன் சேருமா என்று யோசித்து அதன்பிறகு பாடி பார்த்துள்ளார். சரியாக பொருந்தியுள்ளது. அதன்பிறகு முழு பாடலையும் கண்ணதாசன் எழுதி கொடுத்துள்ளார். இது குறித்து கல்லூரி விழா ஒன்றில் இளையராஜா பகிர்ந்துள்ளார்.
கன்னடத்தில் ராஜ்குமார் நடிப்பில் வெளியான தாயி தேவரு என்ற படத்தில் இடம் பெற்ற இந்த பாடலை, தெலுங்கு மற்றும் தமிழுக்கு இந்த டியூனை ஜி.கே.வெங்கடேஷ் பயன்படுத்தியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“