இசையமைப்பாளராக மட்டும் இல்லாமல், பாடகர் மற்றும் பாடல் ஆசிரியராகவும் இருக்கும் இளையராஜா, முதன் முதலில் தமிழ் சினிமாவில் பாடிய பாடல், எழுதிய பாடல் எது என்று உங்களுக்கு தெரியுமா?
Advertisment
தமிழ் சினிமாவில், இசைஞானி என்று அழைக்கப்படும் இளையராஜா, முதல் படத்தில் இருந்தே இசையில் முத்திரை பதித்து வருகிறார். இசை மட்டுமல்லாமல், பாடல் பாடுவது, பாடல் எழுதுவது என பல திறமைகளுடன் வலம் வரும் இவர், தனது இசையில் பல பாடல்களை பாடியுள்ளார். அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று காலம் கடந்து இன்றளவும் நிலைத்திருக்கிறது.
1976-ம் ஆண்டு வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாரளாக அறிமுகமான இளையராஜா, அதன்பிறகு முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு தனது பாடல்கள் மூலம் ஹிட் கொடுத்துள்ளார். கிராமத்து படமாக இருந்தாலும், நகரத்து கதையாக இருந்தாலும், இசையில் ஜாலம் செய்யும் வல்லமை படைத்த இளையராஜா, பாடல் பாடுவது, எழுதுவது என தனது தனித்திறமையுடன் வலம் வருகிறார்.
பன்முக திறமையுடன் வலம் வரும் இளயைராஜா சினிமாவில் முதன் முதலில் பாடிய பாடல் எது? அவர் எழுதிய முதல் பாடல் எது என்பது குறித்து பலருக்கும் கேள்வி இருக்கும். அந்த கேள்விக்கு தற்போது இளையராஜாவே ஒரு பேட்டியில் பதில் அளித்துள்ளார். அன்னக்கிளி படத்தின் மூலம் இளையராஜா இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், ஒரு பாடகராகவும் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ளது.
எஸ்.ஜானகி, பி.சுசீலா, டி.எம்.சௌந்திரராஜன் ஆகியோர் பாடியிருந்தனர். அதே சமயம் இந்த படத்தில் ஒரு காட்சியில், இரவு நேரத்தில் சுஜாதாவும், சிவக்குமாரும் ஒரு ஓடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது, பின்னணியில் ஒரு பாடல் ஒலிக்கும். ‘’சோளம் விதைக்கயிலே, கண்டு சொல்லிப்புட்டு போனவளே’’ என்ற பாடல் யாரோ பாடுவது போன்று ஒலிக்கும். அந்த பாடலை பாடியவர் இளையராஜா தான். அதேபோல் 1985-ம் ஆண்டு வெளியான இதயகோயில் படத்தின் ஒரு பாடலை எழுதியுள்ளார் இளையராஜா. இதுதான் சினிமாவில் அவர் எழுதிய முதல் பாடல்.
மணிரத்னம் இயக்கத்தில் மோகன், அம்பிகா, ராதா நடிப்பில் வெளியான இந்த படத்தில், ‘இதயம் ஒரு கோவில்’ என்ற பாடல் இன்றும் பெரும் வரவேற்பை பெறும் ஒரு பாடலாக உள்ளது. இந்த பாடல் தான் இளையராஜா எழுதிய முதல் பாடல். இதை அவரே ஒரு மேடையில் கூறியுள்ளார்.