ஜெமினி கணேசன் உச்சக்கட்டத்தில் இருந்த காலக்கட்டத்தில் ஏ.வி.எம்.தயாரித்த ஒரு படத்தில் நடித்தபோது, அந்த படத்தின் டைட்டில் அவருக்கு பிடிக்காததால், தினமும் எதாவது சொல்லி கேலி செய்துகொண்டே இருந்த நிலையில், அந்த படம் பெரிய வெற்றி பெற்றதால், மீண்டும் ஒரு வெற்றி வேண்டும் என்று சொல்லி ஏ.வி.எம். நிறுவனத்தில் வாய்ப்பு கேட்டுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை தயாரித்த முக்கிய நிறுவனங்களில் ஒன்று ஏ.வி.எம். இந்நிறுவனத்தில் தயாரிப்பில் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பது அன்றைய நடிகர்களில் முக்கிய குறிக்கோளாக இருந்துள்ளது. அதற்கு ஏற்றார்போல் பல வித்தியாசமான வெற்றிப்படங்களை கொடுத்த ஏ.வி.எம்.நிறுவனம் கடந்த 1960-ம் ஆண்டு தயாரித்த படம் களத்தூர் கண்ணம்மா. ஜெமினி கணேசன், சாவித்ரி, இணைந்து நடித்த இந்த படத்தில் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
இந்த படத்தின் டைட்டில் பிடிக்கா ஜெமினி ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் முடிந்தவுடன், படத்தின் டைட்டில் குறித்து கிண்டல் செய்துகொண்டே இருந்துள்ளார். மேலும் இந்த படத்தை முதலில் இயக்கிய பிரகாஷ் ராவ் என்ற இயக்குனர், படத்தில் கமல்ஹாசன் பாடும், அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற பாடலை முழுவதுமாக படமாக்க முடியாது என்று கூறியதால் படத்தில் இருந்து விலகியதை தொடர்ந்து, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அந்த படத்தை இயக்கியிருந்தார்.
படம் முடிந்தவுடன், இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறாது என்று நினைத்த ஜெமினி கணேசனுக்கு பெரிய அதிர்ச்சி கொடுக்கும் வகையில் படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. படத்தின் வெற்றி விழாவில் கமல்ஹாசனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால், கடுப்பான ஜெமினி கணேசன், அதன்பிறகு ஏ.வி.எம்.நிறுவனத்தின் படங்களில் நடிக்க கூடாது என்று முடிவு செய்துள்ளார். ஏ.வி.எம். நிறுவனமும் அதன்பிறகு ஜெமினி கணேசனை எந்த படத்திற்கும் அழைக்காமல் இருந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில், ஜெமினியின் படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவியதால், தனக்கு ஒரு பெரிய வெற்றி தேவை என்று நினைத்த ஜெமினி, அது ஏ.வி.எம்.நிறுவனத்தால் மட்டுமே கொடுக்க முடியும் என்று யோசத்துள்ளார். அப்போது ஏ.வி.எம். ராமு என்ற படத்தை தயாரிக்க, அதில் ஜெய்சங்கர் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், இடையில் ஜெமினி கணேசன் உள்ளே புகுந்து இந்த படத்தில் நான்தான் நடிப்பேன் என்று ஏ.வி.எம்.செட்டியாரிடம் கூறியுள்ளார்.
இதனால் என்ன செய்வது என்று தெரியாத ஏ.வி.எம்.செட்டியார், ஜெமினியை இந்த படத்திற்கு புக் செய்து, ஜெய்சங்கரிடம் பேசி சமாளித்துள்ளார். இந்த தகவலை ஏ.வி.எம்.குமரன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“